Published : 03 Nov 2020 06:51 PM
Last Updated : 03 Nov 2020 06:51 PM
காவிரி டெல்டாவில் சுமார் 18 லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகத் தொடங்கியுள்ளதாகத் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தில் இன்று மதியம் தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
"காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் நடவுப் பணிகளும் நேரடி விதைப்புப் பணிகளும் முடிவடைந்துள்ளன. களை எடுப்பு, உரமிடுகிற பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு கிட்டத்தட்ட 10 தினங்களுக்கும் மேலாக ஆன நிலையில், பயிர்கள் கருகத் தொடங்கிவிட்டன. இதனால் சம்பா, தாளடிப் பயிர்கள் இவ்வாண்டு கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருக்கின்ற தண்ணீரை வைத்துச் சாகுபடிப் பணியை முடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, தண்ணீரைத் திறக்காமல் சாகுபடிப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அதிகாரிகள் செயல்படுவது ஏமாற்றமளிக்கிறது.
எனவே, கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாகக் கடந்த வாரம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசு விடுவித்த உபரி நீரின் அளவை மட்டும் அப்படியே ஏற்க இயலாது. இது ஒரு சடங்குக் கூட்டமாக நடைபெறுவதையும் அனுமதிக்க மாட்டோம்.
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பார்வையிட வேண்டும். மேட்டூர் அணையில் இருக்கிற தண்ணீரின் அளவையும், கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீர் அளவையும் நேரில் பார்வையிட்டுக் கணக்கிட வேண்டும். அதன் அடிப்படையில் நமக்குத் தரவேண்டிய உரிய தண்ணீரைப் பெற்றுக் கொடுத்தால்தான் காவிரி டெல்டாவைப் பாதுகாக்க முடியும். இல்லையேல் பயிர் கருகுவதைப் பார்த்து மனமுடைந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத்தான் கணக்கிட முடியும்.
எனவே, உடனடியாகக் கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெற்று வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதோடு தற்போதைய உடனடித் தேவையாக வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீரை மேட்டூரில் இருந்து விடுவிக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் தண்ணீரைக் கொண்டு சென்று கருகும் பயிரைக் காப்பாற்றத் தமிழக முதல்வர் முன்வர வேண்டும்" என்று பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறும்போது, "புதுச்சேரி - காரைக்கால் வழியாகச் செல்லக்கூடிய நான்குவழிச் சாலை அமைக்கின்ற பணிக்குக் கடலூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விளைநிலங்களைக் கொடுப்பதற்கு விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள். அதே நேரத்தில் அதிக விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் அதிகம் இல்லாத பகுதிகள் வழியாகச் சாலைகளை அமைக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் ஒப்புதலைப் பெற்று நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட வேண்டும்" என பிஆர்.பாண்டியன் கேட்டுக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT