Published : 03 Nov 2020 06:36 PM
Last Updated : 03 Nov 2020 06:36 PM
பல்வேறு செலவுகளைத் தவறாகக் குறிப்பிட்டு பல்கலைக்கழகப் பணத்தை மோசடியாகப் பெற்றதாக எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை துணைவேந்தராகப் பணியாற்றியவர் மீர் முஸ்தபா உசைன். இவர், துணைவேந்தராகப் பணியில் இருந்தபோது 2008 மே மாதம் வாஷிங்டனில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழகத்தின் சார்பில் விமானத்தில் சென்றுள்ளார்.
இதற்காக உயர் வகுப்பு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு விமானக் கட்டணமாக 2 லட்சத்து 99 ஆயிரத்து 673 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இதன் பின்பு, இந்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டு சாதாரண இருக்கையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீர் முஸ்தபா உசைன் சாதாரண இருக்கைக்கான டிக்கெட்டில் பயணம் செய்துவிட்டு, உயர் வகுப்புக்கான டிக்கெட்டில் பயணம் செய்ததாகக் கூறி மோசடி செய்து, 2 லட்சத்து 22 ஆயிரத்து 332 ரூபாய் பணத்தை பல்கலைக்கழகத்தில் இருந்து கூடுதலாகப் பெற்றுள்ளார்.
இதேபோன்று பிரிட்டிஷ், நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்று வந்த வகையில் டிக்கெட் கட்டணமாக 7 லட்சத்து 82 ஆயிரத்து 124 ரூபாயை பல்கலைக்கழகத்தில் இருந்து மீர் முஸ்தபா உசைன் மோசடி செய்து பெற்றுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி மீர் முஸ்தபா உசைன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னையில் உள்ள ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 24 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT