Published : 03 Nov 2020 03:53 PM
Last Updated : 03 Nov 2020 03:53 PM
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைக்கப்பட்டு வரும் ஆன்மிகப் பூங்கா கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, டிசம்பர் முதல் வாரத்தில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆன்மிகப் பூங்கா கட்டுமானப் பணி, அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டிடக் கட்டுமானப் பணி, இரவு தங்கும் விடுதி உள்ளிட்ட கோயில் நகர அபிவிருத்தித் திட்டப் பணிகளை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், புதுச்சேரி சுற்றுலாத்துறை இயக்குநர் முகமது மன்சூர் ஆகியோர் இன்று (நவ. 3) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோயில் நகர அபிவிருத்தித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நிறைவடையும் தறுவாயில் உள்ள சில பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆன்மிகப் பூங்கா அமைக்கும் பணியை முடித்து டிசம்பர் மாத முதல் வாரத்தில் திறப்பு விழா நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நளன் குளத்தைச் சுற்றி 10 கடைகள் கட்டப்பட்டுள்ளன. ஏற்கெனவே கடைகள் வைத்திருந்தவர்களுக்கு அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக 20 கடைகளைக் கட்டி டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முன்னதாக கடைகளை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடக் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தர் ஓடையில் நீச்சல் குளம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு பகுதியில், கோயில் நகரத்துக்குட்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாத பகுதிகளில் சாலைகள் அமைக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருமலைராயன்பட்டினம், அம்பகரத்தூர் பகுதிகளில் சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைவாக முடித்து ஓரிரு வாரங்களில் புதுச்சேரி முதல்வர், அமைச்சர்களை அழைத்து தொடக்க விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT