Published : 03 Nov 2020 03:41 PM
Last Updated : 03 Nov 2020 03:41 PM

புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதில் பல்கலைக்கழகங்கள் அவசரம் காட்டக் கூடாது: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதில் பல்கலைக்கழகங்கள் அவசரம் காட்டக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (நவ. 3) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக துணைவேந்தர்களுக்குப் பல்கலைக்கழக மானியக்குழு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்காத நிலையில், இவ்வாறு அழுத்தம் கொடுப்பது நியாயமற்றதாகும்.

இந்தியாவில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29-ம் தேதி ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் பொறுப்பு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, புதிய கல்விக் கொள்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு அழுத்தம் கொடுத்து வருகிறது.

புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 5 அறிவிக்கைகளை அனுப்பியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மானியக்குழுவின் இந்த வேகம் தேவையற்றது.

புதிய கல்விக் கொள்கையில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் கூட, சமூக நீதிக்கு எதிரான பல விஷயங்களும் உள்ளன. அதன் சாதக, பாதகங்களை ஆராயாமல் புதிய கல்விக் கொள்கையை அப்படியே செயல்படுத்தி விட முடியாது.

உதாரணமாக, உயர்கல்வியில் நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. சமூக நீதியில் நம்பிக்கை கொண்ட தமிழ்நாடு, நுழைவுத் தேர்வுக்கு எதிராக உள்ளது. நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாகி விடும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடும் இதுவே ஆகும். இதற்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தால் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்த விஷயத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து இறுதி முடிவு எடுப்பது குறித்து பரிந்துரைப்பதற்காக உயர்கல்வித் துறைச் செயலாளர் தலைமையில் முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள் 6 பேரைக் கொண்ட உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக் கேட்ட அக்குழு, அதன் அறிக்கையை தமிழக அரசிடம் விரைவில் தாக்கல் செய்யவுள்ளது.

அதனடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு முடிவெடுத்து அதை மத்திய அரசிடம் தெரிவிக்கும். அதன்பிறகுதான் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்த தெளிவு பிறக்கும்.

ஆனால், அதற்கு முன்பாகவே புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் அளிக்கப்படும் அழுத்தம் பல்கலைக்கழக நிர்வாகங்களில் மட்டுமின்றி மாணவர்கள் மத்தியிலும் தேவையற்ற பதற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகப் பல்கலைக்கழகங்கள் செயல்படுவதற்குத் தேவையான நிதியில் ஒரு பகுதியைப் பல்கலைக்கழக மானியக்குழுதான் மானியமாக வழங்கி வருகிறது. புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவது தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழு கடந்த சில வாரங்களில் ஏராளமான அறிவிக்கைகளை அனுப்பியுள்ள நிலையில், அவை எதையுமே செயல்படுத்தாததைக் காரணம் காட்டி தங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை பல்கலைக்கழக மானியக்குழு நிறுத்தி விடுமோ? என்ற அச்சத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளனர்.

பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மானியக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், மாநிலப் பல்கலைக்கழகங்கள் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டு, அதன் வழிகாட்டுதலில்தான் செயல்பட முடியும். மாநில அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், புதியக் கல்விக் கொள்கையைச் செயல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு கட்டாயப்படுத்துவதும், நெருக்கடி கொடுப்பதும் நியாயமல்ல.

எனவே, புதிய கல்விக் கொள்கையை உயர்கல்வித்துறையில் நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும்வரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு எந்த அழுத்தமும் தராமல் மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் விலகியிருக்க வேண்டும். தமிழகப் பல்கலைக்கழகங்களும் புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதில் அவசரம் காட்டக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x