Published : 03 Nov 2020 01:37 PM
Last Updated : 03 Nov 2020 01:37 PM
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என, தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன்மீது எந்தவொரு முடிவையும் ஆளுநர் தற்போது வரை எடுக்கவில்லை. இந்நிலையில், தன் மீதான தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று (நவ. 3) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து நீதிபதிகள் திருப்தி தெரிவித்தனர். இது குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுத்து உத்தரவிட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று தன் முகநூல் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு சிறைவாசிகளான 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் வரையறையின்றிக் காலம் தாழ்த்தி வருவது மனித நேயமற்றதும், அதிகார அத்துமீறலான செயலாகும்.
29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களில் ஒருவரான பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். இதன் பிறகாவது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி அதிமுக அரசும் இனியும் வாய் மூடி வேடிக்கை பார்த்திராமல் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT