Published : 03 Nov 2020 11:22 AM
Last Updated : 03 Nov 2020 11:22 AM
நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை மக்காச்சோளம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,400-1,600 விலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு:
''இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் மக்காச்சோளம் கிட்டத்தட்ட 15 சதவீதம் பங்களிக்கிறது. மத்தியப் பிரதேசம், கர்நாடகா, பிஹார், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை மக்காச்சோளம் பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும். இம்மாநிலங்கள் இந்தியாவின் மொத்த மக்காச்சோள உற்பத்தியில் 78 சதவீதம் பங்களிக்கின்றன.
வேளாண் அமைச்சகத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி காரீஃப் பருவத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மக்காச்சோள உற்பத்தி 19.88 மில்லியன் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விடச் சற்றே அதிகம். தமிழ்நாட்டில் 2018-19 ஆம் ஆண்டில் மக்காச்சோளம் 3.90 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 2.83 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் ஆகியவை மக்காச்சோளம் பயிரிடும் முக்கிய மாவட்டங்களாகும்.
வர்த்தக மூலங்களின்படி, தமிழ்நாட்டில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு மக்காச்சோளம் தேவையைப் பாதிக்கு மேல் கர்நாடகா, பிஹார், ஆந்திராவிலிருந்து வரும் வரத்து பூர்த்தி செய்கிறது. இப்பருவத்தில் குறைந்த விலை காரணமாக உடுமலை பகுதியில் மக்காச்சோள உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளது. அதேநேரம் கர்நாடகாவின் அதிக உற்பத்தி எதிர்வரும் மாதங்களில், தமிழகக் கோழிப் பண்ணைகளின் தேவையைப் பூர்த்தி செய்யும். வரத்தானது டிசம்பர் மாத இறுதி வரை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக, வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கடந்த 16 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மக்காச்சோளத்தின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் அடிப்படையில் நவம்பர் முதல் ஜனவரி வரை நல்ல தரமான மக்காச்சோளத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.1,400-1600 வரை இருக்குமெனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு 0422-2431405, 0422-2450507 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்''.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT