பாரதியாரின் மொழிக் கொள்கையை வரையறுப்பது சிக்கலானது: ஜே.என்.யூ பல்கலையில் சுபவீ கருத்து

பாரதியாரின் மொழிக் கொள்கையை வரையறுப்பது சிக்கலானது: ஜே.என்.யூ பல்கலையில் சுபவீ கருத்து
Updated on
2 min read

மகாகவி சுப்பரமணிய பாரதியார் பல மொழிகளை அறிந்திருந்தவர் என்பதால், அவரது மொழிக் கொள்கைகளை வரயறுத்து கூறுவது சிக்கலானது என பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். டெல்லியின் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்தின்(ஜே.என்.யூ) இந்தியமொழிகள் மையத்தில் சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுச் சொற்பொழிவுவில் இதை தெரிவித்தார்.

மத்திய பல்கலைகழகங்களில் ஒன்றான ஜே.என்.யூ பல்கலையில் பாரதியார் மீதான ஆறாவது நினைவுச் சொற்பொழிவு இன்று.நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட பேரா. சுப.வீரபாண்டியன் “பாரதியின் மொழிக்கொள்கை” என்ற தலைப்பில் ஆற்றிய பொழிவுரையில் கூறியதாவது:

பாரதியார் தமிழ்த்தேசியத்துக்கும் இந்திய தேசியத்துக்கும் இடையிலான நடுப்பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர். பாரதி பல மொழிகளையும் அறிந்தவர் என்பதால் அவரது மொழிக்கொள்கையை வரையறுத்துக் கூறுவது சிக்கலானது.

பாரதியின் வாழ்க்கைப் பின்புலம், பன்மொழியறிவு ஆகியவற்றை விளக்கி சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் குறித்தான அவர் பதிவுகளின் வழியாக அவரது மொழிக்கொள்கையை அறியமுடியும். பாரதி பத்துமொழிகள் வரை தெரிந்தவராயினும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டில் மட்டுமே புலமை பெற்றவராயிருந்தார். இவருக்கு சமஸ்கிருதம் பேசத்தெரியாது, பேசினால் புரிந்துகொள்வேன் என்பதுதான் தன் சமஸ்கிருத அறிவு குறித்த பாரதியின் எழுத்துப்பதிவு. இத்துடன், தெலுங்கு, மலையாளம், இந்திஉள்ளிட்ட பிறமொழிகளையும் அவர் அறிந்திருந்தார். இதனால்தான் ‘யாமறிந்த மொழிகளிலே…’ என்று அவரால் பாடமுடிந்தது.

பாடல்களை விட தனது உரைநடையில் தமிழ் குறித்து அதிகம் புகழ்ந்து எழுதியுள்ளார். தமிழினைப் பற்றி பாரதி மொத்தமாக ஆறு பாடல்கள் மட்டுமே இயற்றியுள்ளார். ஆனால் பக்தி சார்ந்து அவர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை 63 வரை. தன் உரைநடையில் மிகுதியாக சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துகிறார். செந்தமிழ்நாடெனும் போதினிலே, சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்று தமிழைப் போற்றி இவர் இயற்றிய பாடல்கள் தன்னெழுச்சியாக இயற்றியதில்லை. அவற்றை ஒரு போட்டிக்காகவே இயற்றினார்.

ஆனால் தமிழ் மீது பற்றில்லாமல் அதை அவர் எழுதியிருக்க முடியாது. இந்தியாவின் பொதுமொழியாக இந்தி இருக்கவேண்டும் என்று முதலில் கூறும் பாரதி, பின்னர் சமஸ்கிருதமே பொதுமொழியாக வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழ்நாடு முழுதும் தமிழ் சிறக்கட்டும், பாரதம் முழுதும் சமஸ்கிருதம் சிறக்கட்டும் என்றார். தமிழின் மீது பற்றுள்ளவராயினும், பாரதிக்கு சமஸ்கிருதத்தின் மீது மாறாத பெருமதிப்பு இருந்ததைக் காணமுடிகிறது. அவர், சமஸ்கிருதத்தை தேவபாஷை என்று கூறுவது ஒன்றும் விளையாட்டில்லை என்கிறார்.

வடமொழியில் இருப்பதைப் போன்று தமிழிலும் வர்க்க எழுத்துமுறை அறிமுகப்படுத்தவேண்டும் என்று கூறி, வ.உ.சிதம்பரனார் அதற்குத் தக்க எதிர்வினையாற்றிய பின்னரே, தன் கருத்தைத் திரும்பப்பெற்றார். ஆங்கிலத்தைப் பொருத்தவரை, ஷெல்லிதாசன் என்ற புனைபெயரில் எழுதியவராக இருந்தாலும், பாரதி அதனைப் பயன்பாட்டுமொழியாகவே காண்கிறார்.

’மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று ஒரு ஆங்கிலேயப் பேராசிரியர் கூறியதைத் தன் பாடலில் பதிவுசெய்த பாரதி, அவ்வாறு ஏற்படாமல் தடுக்க ஆங்கிலத்தில் உள்ள சாஸ்திர (அறிவியல்) நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழை செறிவாக்கவேண்டும் என்றார். இதுவே ஆங்கிலம் குறித்த பாரதியின் பார்வை. தன் தம்பி ஆங்கிலத்தில் தனக்குக் கடிதம் எழுதும்போதும், இனி ஆங்கிலத்தில் கடிதம் எழுதவேண்டாமம் என்றே கடிந்துரைக்கிறார் பாரதி.

முடிவாக, தமிழ்ப்பற்று இருந்தாலும் சமஸ்கிருதத்தின் மீதே பாரதிக்கு அதிக மதிப்பு இருந்தது. ஆங்கிலத்தைப் பயன்பாட்டுமொழியாகக் கண்டார். இதுவே அவரது மொழிக்கொள்கை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் ஜவஹர்லால் பல்கலையின் தமிழ்மொழி உதவி பேராசிரியரான நா.சந்திரசேகரன் வரவேற்புரை ஆற்றினார். இந்தியமொழிகள் மையத்தின் தலைவர் பேராசிரியரான. அன்வர் ஆலம் தலைமையுரை நிகழ்த்தினார். இந்தியமொழிகள் மையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கன்னட இருக்கைக்கான பேராசிரியர் புருஷோத்தம பிலிமலே வாழ்த்துரை ஆற்றினார். இறுதியில் பேராசிரியர் தாமோதரன் (அறவேந்தன்) நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in