Last Updated : 19 Oct, 2015 05:00 PM

 

Published : 19 Oct 2015 05:00 PM
Last Updated : 19 Oct 2015 05:00 PM

முன்மாதிரியாக திகழும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக மேலாண்மை சங்கம்: 2 ஆண்டுகளில் கையிருப்பு ரூ.1 கோடியாக உயர்வு

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் செயல்படும் மீன்பிடித் துறைமுக மேலாண்மை சங்கம் தமிழகத்துக்கே முன்மாதிரியாக மாறியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சங்கத்தின் கையிருப்பு ரூ.1 கோடியை நெருங்கியுள்ளது.

இந்த சங்கத்தை பின்பற்றி மாநிலத்தில் உள்ள மற்ற மீன்பிடித் துறைமுகங்களிலும், மீன் இறங்கு தளங்களிலும் மேலாண்மை சங்கங்களை அமைக்க அரசு உத்தரவிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெரிய துறைமுகம்

தமிழகத்தில் உள்ள 3 பெரிய மீன்பிடித் துறைமுகங்களில் தூத்துக்குடியும் ஒன்று. கடந்த 1973-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தங்கும் தளமாக கொண்டு சுமார் 250 விசைப்படகுகள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. இந்த விசைப்படகுகள் மூலம் தினமும் சராசரியாக 300 டன் வரை மீன்கள் பிடித்து வரப்படுகின்றன. இந்த மீன்கள் ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை ஏலம் போகும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மீன்பிடித் துறைமுகத்தில் ஒரு சிறிய அடிப்படை வசதி செய்ய வேண்டுமானாலும், அரசு அனுமதியை பெற்று, அதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்தால் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது.

235 உறுப்பினர்கள்

ஆனால், தற்போது அந்த நிலை மாறிவிட்டது. எந்தவித பணிகளையும் செய்யவும் அரசின் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை இல்லை. உடனுக்குடன் எந்த பணிகளையும் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள துறைமுக மேலாண்மை சங்கம் தான் இதற்கு காரணம். இச்சங்கம் கடந்த 2009-ம் ஆண்டு முறைப்படி பதிவு செய்யப்பட்டது. துறைமுக வளாகத்தில் உள்ள அனைத்து சொத்துக்கள் மற்றும் பராமரிப்பு பொறுப்புகள் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு, 29.5.2013 முதல் சங்கம் பொறுப்பில் இயங்கி வருகிறது.

மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட ஆலோசனைக் குழு, மீன்துறை இணை இயக்குநரை தலைவராக கொண்ட மேலாண்மைக் குழு ஆகிய 2 குழுக்களின் பொறுப்பில் தான் மீன்பிடித் துறைமுகம் தற்போது முழுமையாக செயல்பட்டு வருகிறது. இரு குழுக்களிலும் சேர்த்து பல்வேறு துறை அதிகாரிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள் என மொத்தம் 235 உறுப்பினர்கள் உள்ளனர்.

வருவாய் பெருக்கம்

சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மீன்பிடித் துறைமுக உதவி இயக்குநர் எஸ். சிவக்குமார் கூறும்போது, ‘மீன்பிடித் துறைமுக மேலாண்மை சங்கம் அமைக்கப்பட்ட பிறகு, மீன்பிடித் துறைமுகத்தில் வசூலிக்கப்படும் படகுகளுக்கான பால வாடகை கட்டணம், வாகனங்களுக்கான நுழைவு வாயில் கட்டணம், அரசு ஆதார பணிமனை குத்தகை, சினிமா படப்பிடிப்பு கட்டணம், சைக்கிள் ஸ்டாண்டு குத்தகை, அறை வாடகை போன்ற அனைத்து கட்டணங்களையும் கணிசமாக உயர்த்தி சங்கத்தின் வருவாயை பெருக்கியுள்ளோம். இந்த வருவாயை கொண்டு மீன்பிடித் துறைமுகத்தில் 10 துப்புரவு பணியாளர்கள், 5 காவலர்கள், ஒரு எலக்ட்ரீசியன் ஆகிய பணியாளர்களை நாங்களே நியமித்துள்ளோம்.

மீன்பிடித் துறைமுக வளாகத்தில் விசைப்படகு தொழிலாளர் நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்தியுள்ளோம். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடித் துறைமுகத்தில் குடிநீர் வசதி கிடையாது. மேலாண்மை சங்கம் அமைக்கப்பட்ட பிறகு மாநகராட்சியில் பேசி, அதற்கான கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீர் வசதியை ஏற்படுத்தியுள்ளோம்.

மீனவர்கள் மகிழ்ச்சி

மீனவர்கள் மற்றும் இங்கு வரும் வியாபாரிகள் நலன் கருதி சிற்றுண்டி விடுதி ஏற்படுத்தியுள்ளோம். கழிவறை மற்றும் குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஐஸ் உற்பத்தி நிலையம் ஒன்றை துறைமுக வளாகத்தில் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. மீனவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொடுக்கிறோம்.

முதலில் துறைமுக மேலாண்மை சங்கம் அமைக்க மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தது. தற்போது பல்வேறு வசதிகள் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்’ என்றார் அவர்.

ரூ.1 கோடி இருப்பு

மீன்வளத்துறை மண்டல இணை இயக்குநர் ஆர். அமல்சேவியர் கூறும்போது, ‘

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக மேலாண்மை சங்கம் சார்பில் வங்கியில் ரூ. 90 ஆயிரம் நிரந்தர வைப்புத் தொகையாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், சங்கத்தின் வங்கி சேமிப்பு கணக்கில் கடந்த 5-ம் தேதி நிலவரப்படி ரூ.6,87,249 இருப்பு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சங்கத்தின் கையிருப்பு ரூ.96,87,246 ஆக உயர்ந்துள்ளது.

மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு இந்த நிதியில் இருந்து எடுத்து செலவு செய்யலாம் என, அரசு அனுமதி அளித்துள்ளதால், அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்ய முடிகிறது.

குடிநீர், சுகாதாரம் போன்ற பணிகள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள நிலையில், மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்துக்கு முன்மாதிரி

மாவட்ட ஆட்சியரின் அறிவுரை மற்றும் தொடர் கண்காணிப்பு காரணமாக சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் தமிழகத்துக்கே முன்மாதிரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியை பின்பற்றி மற்ற மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்களிலும் மேலாண்மை சங்கங்களை அமைக்க மீன்வளத்துறை ஆணையரால் உத்தரவிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் மீன்வளத் துறை அதிகாரிகள் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்துக்கு வந்து அதன் சிறப்புகளை பார்வையிட்டு செல்கின்றனர்.

இதனை தவிர தேசிய மீன்வள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.12.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நவீனபடுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் சுத்தமான, சுகாதாரமான மீன்பிடித் துறைமுகமாக மாற்றப்பட்டுள்ளது’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x