Published : 23 Oct 2015 08:05 AM
Last Updated : 23 Oct 2015 08:05 AM
பல எழுத்தாளர்கள் தங்கள் விருதை திருப்பி அளித்துள்ள நிலையில், சாகித்ய அகாடமியின் செயற்குழு கூட்டம், டெல்லியில் இன்று நடக்கிறது. இதில், எழுத்தாளர் கல்புர்கியின் படுகொலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அகாடமியின் தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரபல கன்னட எழுத்தாளர் கல்புர்கி, கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் முதியவர் படுகொலை, எழுத்தாளர் சுசீந்திர குல்கர்னி, காஷ்மீர் எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் ஆகியோர் மீது இந்துத்துவா அமைப்பினரின் தாக்குதல்கள் என தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரா கவும், எழுத்தாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் நடைபெறும் சம்பவங்களை சாகித்ய அகாடமி கண்டிக்கவில்லை என படைப்பாளிகள் அதிருப்தி தெரிவித்தனர். பலர், சாகித்ய அகாடமி விருதை திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்தனர். அகாடமி யின் நிர்வாகிகளில் சிலர் பதவி விலகினர். இதனால் சாகித்ய அகாடமி நிறுவனத் துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக அகாடமியின் அவசர செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று (அக். 23) நடைபெறுகிறது. இதில் கல்புர்கி படுகொலை உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சாகித்ய அகாடமியின் தமிழ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கி.நாச்சிமுத்து கூறியதாவது:
கல்புர்கியின் படுகொலை சம்பவத்தை பேச்சுரிமை, கருத்துரிமை, பன்முக கலாச் சாரத் தன்மை, சகிப்புத்தன்மை, சமத்துவம் மற்றும் நமது நாட்டின் ஜனநாயக மரபு களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலாகவே கருத வேண்டும். இந்த படுகொலையை கண்டித்து, முக்கிய பங்காற்ற வேண்டிய சாகித்ய அகாடமி நிறுவனம், உரிய நேரத்தில் செயல்படாமல் மவுனமாக இருந்த காரணத்தால் தற்போது கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது.
விருதுகளை திரும்பி ஒப்படைப்பது, பதவி விலகுவது என எழுத்தாளர்கள் எடுத்த முடிவு அகாடமிக்கு எதிரானது அல்ல. அகாடமியின் செயல்படாத் தன்மையால் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவே என்பதை புரிந்துகொள்ளலாம். இனியாவது எழுத்தாளர்களின் நம்பிக் கையை பெறும் வகையில் அகாடமி செயல்பட வேண்டும். அரசின் நிதியுதவி நிறுத்தப்படும் என்பது போன்று சில வெளி சக்திகள் விடுக்கும் மறைமுக மிரட்டல் களுக்கு அகாடமி பணியக் கூடாது.
கல்புர்கி படுகொலை செய்யப்பட்ட தையும், எழுத்தாளர்கள் மீதான தாக்குதல் களையும் கண்டிக்கும் வகையில் இன்றைய கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். விருதை திரும்ப ஒப்படைத்தவர்கள், பதவி விலகியவர்கள் தங்கள் முடிவை திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுக்க வேண்டும். கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற தவறினால், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி தமிழக பிரதிநிதிகள் கூடி முடிவு செய்வோம்.
இவ்வாறு பேராசிரியர் நாச்சிமுத்து தெரிவித்தார்.
தமிழகத்தின் சார்பில் சாகித்ய அகாட மியில் இடம்பெற்றுள்ள பொதுக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளருமான இரா.காமராசும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT