Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM
கோபி அருகே நேற்று அதிகாலை பெய்த கனமழையால், காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், இரு மலைக்கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. 42 அடி உயரம் கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர், குன்றி மற்றும் விளாங்கோம்பை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர், காட்டாறு வழியாக வந்தடைகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் மேல் பகுதியில் உள்ள விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் ஆகிய இரு மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்கள், இந்த காட்டாறுகளை கடந்து தான் வெளியே வர முடியும். மழைக் காலங்களில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இக்கிராம மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழையால், குண்டேரிப்பள்ளம் அணை நான்கு மணிநேரத்தில் இரண்டு அடிகள் உயர்ந்து 34 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. கட்டாறுகளில் நீரின் வேகம் மற்றும் போக்கு குறித்து கணிக்க முடியாது என்ற நிலையில், கிராம மக்கள் நீர் குறையும் நேரத்தில் மட்டும் துணிச்சலாக அபாயகரமான முறையில் காட்டாற்றைக் கடந்து வருகின்றனர். மற்ற மலைவாழ் மக்கள் மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு 8 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் கால்நடையாக பயணித்து வினோபாநகர் மற்றும் கொங்கர்பாளையம் பகுதிக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே மாலையில் வெள்ளம் குறையத் தொடங்கியது.
இந்த கிராமங்களுக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையிட்டு ஒரு மாதத்துக்கு முன்பு பணியை தொடங்கி வைத்தார். ஆனால், இன்றுவரை பணிகள் தொடங்காத நிலை நீடிக்கிறது. சாலைப்பணிகளின்போது காட்டாறு அமைந்துள்ள இடங் களில் சிறு பாலங்களை அமைத்து தர வேண்டும் என இரு கிராம மக்களும் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT