Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM
மலைவாழ் மக்களுக்கு எஸ்டி சாதிச்சான்று வழங்காவிட்டால் வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்பது என ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக ஜவ்வாது மலை உட்பட 32 மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு, புதூர்நாடு என 3 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த 3 கிராம ஊராட்சிகளில் சுமார் 32 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அதேபோல, ஏலகிரிமலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
மலைவாழ் மக்கள் தங்களுக்கு எஸ்டி பிரிவில் சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஜவ்வாதுமலை வாழ் மக்கள் மற்றும் ஏலகிரி மலைவாழ் மக்கள் சார்பில் நெல்லிவாசல் நாடு கிராமத்தில் உள்ள துர்கையம்மன் கோயில் வளாகத்தில் ‘சாதிச்சான்றிதழ்’ பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஜவ்வாதுமலை உட்பட 32 மலை கிராமங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர். நாட்டாண்மை ராதா கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஏலகிரிமலை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். எஸ்டி பேரவை மாநில ஆலோசகர் மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கூட்டத்தை தொடங்கி சாதிச்சான்றிதழ் பெறு வதற்கான வழிமுறைகளை குறித்து விளக்கி பேசினார்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது, "ஜவ்வாதுமலையில் உள்ள 3 கிராம ஊராட்சிகளில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு எஸ்டி பிரிவில் சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு இதுவரை சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதனால், எங்களது குழந்தை களின் வாழ்வாதாரம், அரசின் சலுகைகளை பெற முடியாமல் தவிக்கிறோம்.
தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தை தவிர மற்ற மாவட் டங்களில் மலைவாழ் மக்களுக்கு எஸ்டி பிரிவில் சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. ஜவ்வாது மலையின் ஒரு பகுதி திருவண் ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்டுள்ளது.
அந்தபகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் எஸ்டி சாதிச்சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால், திருப் பத்தூர் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், திருப்பத்தூர் சார் ஆட்சியர் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. எனவே, எஸ்டி பிரிவில் சாதிச்சான்றிதழ் வழங்குவது குறித்து ஆலோசனைக்கூட்டத்தில் ஒரு சில முக்கிய முடிவுகளை ஒரு மனதாக எடுத்துள்ளோம்.
அதன்படி, ஜவ்வாதுமலை மற்றும் ஏலகிரி மலையில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு உடனடியாக எஸ்டி பிரிவில் சாதிச்சான்றிதழ் வழங்காவிட்டால் எங்களுக்கு அரசு வழங்கியுள்ள ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடமே திருப்பி வழங்குவது என்றும், விரைவில் வரவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டுமொத்த மலைவாழ் மக்களும் புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளோம்.
மேலும், மலைவாழ் மக்கள் அனைவரையும் ஒன்று திரண்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளோம். அதற்கான தேதியை அடுத்த கூட்டத்தில் ஆலோசித்து அறிவிப்போம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment