Published : 11 May 2014 12:00 AM
Last Updated : 11 May 2014 12:00 AM
மின்சார தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான வழிகளைக் காண, 5 பொதுமக்கள் பிரதிநிதிகள் உட்பட 11 பேர் கொண்ட குழுவை அமைக்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த கமிட்டியில் இடம் பெறத் தகுதியான பொதுமக்கள் பிரதிநிதிகள், ஒழுங்குமுறை ஆணையத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது புதிய திட்டங்கள் மூலம் அதிக அளவு மின் உற்பத்தி கிடைப்பதால், மின் தட்டுப்பாடு குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகரிக்கும் தொழிற்
சாலைகள், வணிக நிறுவனங் களுக்கான கூடுதல் தேவையை சமாளிக்க மின் வாரியம் திணறி வருகிறது. மின் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத் தேவையை உணர்ந்து திட்டங்களை தீட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் தொழிற்துறையினர் கோரி வருகிறார்கள். இதையடுத்து, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சாரத் தேவை மேலாண்மை தொடர்பான ஒழுங்குமுறையில் சில திருத்தங்களை செய்துள்ளது. இதன் படி, ஒழுங்குமுறை ஆணைய செயலர் தலைமையில் 11 பேர் கொண்ட கமிட்டியை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
இக்கமிட்டியில் ஒழுங்குமுறை ஆணைய செயலர், மின் வாரிய மின் தேவை மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக தலைமைப் பொறியாளர் ஒருவர், மின் விநியோக தலைமைப் பொறியாளர், அரசு தலைமை மின் ஆய்வாளர், தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை பொது மேலாளர் ஆகியோர் இடம்பெற்று இருப்பார்கள். அவர்களோடு கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண்மை மற்றும் மின் துறையில் சிறப்பு அனுபவம் பெற்ற ஐந்து பொதுமக்கள் பிரதிநிதிகள் உறுப்பினர்களாகச் செயல்படுவர். இதில் பொதுமக்கள் பிரதிநிதிகளாக இடம்பெறுவதற்கு, தகுதியானவர்கள், தங்கள் விண்ணப்பங்களை வரும் 23-ம் தேதிக்குள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கமிட்டியில் இடம் பெறும் பொதுமக்கள் பிரதிநிதிக்கு, மின் தேவை மேலாண்மைக் கூட்டத்தில் பங்கேற்க ஒரு நாள் கூட்டத்துக்கு ரூ.500ம், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி ரயில் பெட்டியில் வருவதற்கான டிக்கெட் செலவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டி உறுப்பினர்கள், அவ்வப்போது கூட்டங்களை நடத்தி, எதிர்கால மின் தேவை, நடைமுறை திட்டங்கள், மின் கட்டண முறைகள், வரவு, செலவு குறித்த உத்தேச அறிக்கை, மின் கொள்முதல், விநியோகம், புதிய திட்டங்களை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து கலந்து பேசி முடிவெடுப்பார்கள் என்று, மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை ரயில்வே துறையில் தான், இதுபோன்று ரயில்வே பயன்பாட்டாளர்களின் கலந்தாலோசனைக் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கமிட்டி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவைக்கேற்ப கூட்டங்களை நடத்தி வருகிறது. அதுபோன்று தமிழக மின் துறையிலும் கலந்தாய்வுக் கமிட்டி அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT