Published : 02 Nov 2020 07:24 PM
Last Updated : 02 Nov 2020 07:24 PM
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் நுகர்வோர் ஆணையமாக மாற்றப்பட்டுள்ளதால் ரூ.1 கோடி வரை இழப்பீடு கோரும் வழக்குகளுக்கு மாவட்ட அளவிலேயே தீர்வு காண வழிவகை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நுகர்வோர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையிலும், அதன் கிளை மதுரையிலும் இயங்கி வருகிறது. காலாவதியான பொருட்கள் விற்பனை, கூடுதல் விலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவைக் குறைபாட்டால் பாதிக்கப்படுவோர் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து இழப்பீடு பெறலாம். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான இந்த நீதிமன்றங்களில், பாதிக்கப்பட்டோர் நேரடியாக மனுத் தாக்கல் செய்து நிவாரணம் பெறவும் வழிவகை உள்ளது.
இதில், இழப்பீடு கோரும் தொகை ரூ.20 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரலாம். நிவாரணத் தொகை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ள வழக்குகள் மற்றும் மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்குகள், மாநில நுகர்வோர் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வந்தன. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி நுகர்வோரின் புகார் மனு அல்லது மேல்முறையீட்டு மனுவை 90 நாட்களுக்குள் விசாரித்து முடித்து வைக்க வேண்டும்.
இந்நிலையில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் படி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்கள், மாவட்ட நுகர்வோர் ஆணையமாக மாற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாகத் தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழுச் செயலாளர் எஸ்.புஷ்பவனம் கூறும்போது, "மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் ஆணையமாக மாற்றப்பட்டுள்ளதன் மூலம் மாவட்ட அளவிலேயே ரூ.1 கோடி வரையிலான நிவாரணத் தொகை கோரும் வழக்குகளுக்குத் தீர்வு காண வழிவகை ஏற்பட்டுள்ளது. அதேபோல, மாநில ஆணையத்தில் ரூ.10 கோடி வரையிலான நிவாரணத் தொகை கோரும் வழக்குகளுக்குத் தீர்வு காணலாம்.
ரூ.10 கோடிக்கு மேல் நிவாரணத் தொகை இருந்தால் மட்டுமே தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாட வேண்டியிருக்கும். இதன் மூலம் மாநில ஆணையம், தேசிய நுகர்வோர் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைவதோடு, நுகர்வோரும் அதிக தொகைக்காக மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டியிருக்கும்.
முன்பு எந்தப் பொருள் வாங்கினாலும் அந்தப் பொருளைத் தயாரித்த அல்லது விற்பனை செய்த நிறுவனம் எங்கு உள்ளதோ அங்குள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மட்டுமே வழக்குத் தொடர முடியும். ஆனால் தற்போது, நாம் எங்கு பொருள் வாங்கினாலும், நாம் வகிக்கும் பகுதியில் உள்ள மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடரலாம்.
உதாரணமாக, திருச்சியில் வசிக்கும் ஒருவர் கோவையில் உள்ள கடையில் ஏதேனும் பொருள் வாங்கி அதில் குறைபாடு ஏற்பட்டால், அவர் திருச்சியில் உள்ள நுகர்வோர் ஆணையத்திலேயே வழக்குத் தொடரலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT