Published : 02 Nov 2020 06:31 PM
Last Updated : 02 Nov 2020 06:31 PM

கரோனா பரவிய கடந்த 7 மாதங்களில் தொற்று பாதித்த 266 கர்ப்பிணிகள் உள்பட 8,408 பேருக்கு பிரசவம்: மதுரை அரசு மகப்பேறு மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு

மதுரை

கரோனா தொற்று பரவிய கடந்த 7 மாதங்களில் தொற்று பாதித்த 266 பேர் உள்பட 8,408 கர்ப்பிணிகளுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு துறை மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

‘கரோனா’ தொற்று வேகமாகப் பரவிய காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சைகள் மறுக்கப்பட்டன. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமே தடையில்லாமல் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘கரோனா’ காலத்திலும் 24 மணி நேரமும் ‘ஷிஃப்ட்’ முறையில் மருத்துவக்குழுவினர், சாதாரண கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமில்லாமல் தொற்று பாதித்தவர்களுக்கும் சிகிச்சைகள் வழங்கினர். பிரசவமும் பார்த்தனர்.

ஒரே நாளில் சிக்கலான 66 பிரசவங்கள் நடந்தபோதுகூட அவர்கள் தாய், சேய் மரணமில்லாமல் பிரசவம் பார்த்துள்ளனர். அவர்களுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா காலத்தில் சிறப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை வழங்கிய மகப்பேறு துறை மருத்துவக்குழுவினருக்கு பாராட்டு விழா நடந்தது. ‘டீன்’ சங்குமணி கலந்து கொண்டு அவர்களை பாராட்டினார்.

அவர் பேசுகையில், ‘‘மகப்பேறு துறையில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கடந்த 7 மாதங்களாக 9, 879 பிசரவங்கள் நடந்துள்ளன. இதில், கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 266 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் 8,408 பிரசவங்கள் நடந்துள்ளன. கரோனா தொற்று வேகமாக பரவிய இந்த காலத்திலும் பிரசவங்கள் தடையில்லாமல், முன்பை விட அதிகமாக மதுரை அரசு மருத்துவமனையில் நடந்துள்ளன. ஜூலை 7-ம் தேதியும், அக்டோபர் 22ம் தேதியும் ஒரே நோளில் 66 சிக்கலான பிரவசங்கள் பார்க்கப்பட்டுள்ளன.

இந்த பிரசவங்களில் எந்த வித மரணங்களும் ஏற்படால் தாய், சேய் காப்பாற்றப்பட்டுள்ளனர். தென் தமிழகத்தில் எத்தனையோ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அந்த மருத்துவமனைகளில் இருந்து கரோனா காலத்தில் அதிகளவு கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவருக்கும் நேரம், காலம் பார்க்காமல், விடுமுறை எடுக்காமல் மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் கூட்டு முயற்சியுடன் சிகிச்சை வழங்கியுள்ளனர்.

தற்போது மகப்பேறு சிகிச்சைக்கு தென் தமிழகத்தில் உயர் சிறப்பு சிகிச்சை வழங்கும் மையமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு துறை திகழ்கிறது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x