Published : 02 Nov 2020 04:26 PM
Last Updated : 02 Nov 2020 04:26 PM

தடுப்புச் சுவரில் துளையிட்டு வைகை ஆற்றில் கழிவு நீரை வெளியேற்றும் மதுரை மாநகராட்சி: ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிக்காக கோடிக்கணக்கில் செலவு செய்தும் வீண்

மதுரை

மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க மாநகராட்சி கோடிக்கணக்கில் செலவு செய்து தடுப்புச் சுவர் கட்டிய நிலையில் தற்போது மாநகராட்சிப் பணியாளர்களே அந்த சுவரில் துளையிட்டு குழாய் மூலம் கழிவு நீரை ஆற்றிற்குள் வெளியேற்றுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் தமிழகத்தில் ஓடும் முக்கிய ஆறுகளில் வைகை ஆறு பல்வேறு நீண்ட நெடிய கலாச்சாரப் பெருமைகளைக் கொண்டது. ஆரம்ப காலத்தில், மதுரையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடிய வைகை ஆறு, தற்போது நிரந்தரமாகவே வறட்சிக்கு இலக்காகிவிட்டது.

வைகை அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு குடி நீருக்காக தண்ணீர் திறக்கும்போது, மதுரை சித்திரைத் திருவிழாவுக்காக தண்ணீர் திறக்கும்போது மட்டுமே ஒரிரு நாட்கள் வைகை ஆற்றில் தண்ணீரைப் பார்க்க முடிகிறது. மற்ற நாட்களில் மதுரை நகர்பகுதியில் கழிவு நீர் மட்டுமே ஓடுகிறது.

இந்நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கரையோரப்பகுதியில் பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றி கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்படுகிறது.

மழைநீர், கழிவுநீர் கரையோரப்பகுதியில் வருவதை தடுக்க தடுப்பு சுவர்களும் கட்டப்படுகிறது. இதற்காக மாநகராட்சி வைகை ஆற்றில் கோடிக்கணக்கில் நிதியை வாரி இறைத்துள்ளது. ஆனால், தற்போது பழையப்படி வைகை ஆற்றில் கழிவு நீரை வெளியேற்றுவது தொடங்கியுள்ளது.

சந்தைப்பேட்டை அருகே கொடிதொழுவம் சந்து பகுதியில் மாநகராட்சிப் பணியாளர்களே, வைகை ஆற்றங்கரையோரம் கட்டிய தடுப்பு சுவரை ஓட்டைப்போட்டு குழாய் மூலம் அப்பகுதில் வெளியாகும் கழிவு நீரை ஆற்றில் திருப்பிவிடும் பணியில் ஈடுபட்டனர்.

கழிவு நீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்கவே தடுப்பு சுவர் கட்டப்பட்டது. தற்போது அந்த திட்டத்தின் நோக்கத்தையே மாநகராட்சி பணியாளர்கள் மறந்து தற்போது கழிவு நீரை வெளியேற்ற தடுப்புசுவரை ஓட்டைப்போடுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வைகை நிதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், ‘‘மதுரை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி நிர்வாகம், ஆற்றில் கழிவுநீரை கலக்கவிடமாட்டோம் என்று உறுதிகூறியுள்ளனர். தற்போது கட்டிய தடுப்ச்பு சுவரையே உடைத்து ஆற்றில் கழிவு நீரை விட குழாய் அமைக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், அப்பகுதி மக்கள் சில நாட்களுக்கு முன் மழைநீர் வீட்டிற்குள் புகுவதாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மழைநீரை வெளியேற்றவே இந்தக் குழாயை ஆற்றுக்குள் அமைக்கிறோம் என்று ஏமாற்றுகின்றனர். இதேபோல், கள்ளுக்கடை சந்து, மரக்கடை சந்துப்பகுதியிலும் கழிவுநீர் கலக்கிறது.

அவர்களால் வைகை ஆற்றங்கரைப்பகுதியில் எந்தெந்த இடங்களில் கழிவு நீர் உடைப்பு ஏற்பட்டுள்ளது, அதை கண்டறிந்து பராமரித்து எவ்வாறு சரி செய்வது என்பது தெரியவில்லை. தற்காலிகமாக தீர்வாக பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க கழிவுநீர், மழைநீரை வெளியேற்ற அந்த குழாயை ஆற்றுக்குள் அமைக்கின்றனர்.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை வைகை ஆற்றில் முடிப்தற்குள்ளே அந்த திட்டத்தில் கட்டிய சுவரை உடைத்து ஆற்றுக்குள் கழிவு நீரை வெளியேற்றுவது ஏற்றுக் கொள்ளவே முடியாது, ’’ என்றார்.

மாநகராட்சி ஆணையாளர் விசாகனிடம் கேட்டபோது, ‘‘மழைநீரை ஆற்றுக்குள் விடலாம். அப்பகுதியே மழைநீர் ஆற்றுக்குள் வடிந்தோடும்நிலையில்தான் உள்ளது. தற்போது தடுப்பு சுவர் கட்டியதால் வழிந்தோட வழியில்லாததால் குழாய் அமைக்கிறார்கள். கழிவுநீரை எக்காரணம் கொண்டும் ஆற்றுக்குள்விட மாட்டோம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x