Published : 02 Nov 2020 04:24 PM
Last Updated : 02 Nov 2020 04:24 PM
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதைக் கண்டித்து நவ.9-ம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் தர்ணா நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலாளரும், தமிழ்நாடு- புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளருமான சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கையெழுத்து பெறும் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி ஆகியன இன்று நடைபெற்றன. கையெழுத்து பெறும் இயக்கத்தைத் தொடங்கி வைத்த சஞ்சய் தத், செய்தியாளர்களிடம் கூறியது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் மாவட்டங்கள்தோறும் கையெழுத்துப் பெறும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கையெழுத்து இயக்கத்துக்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கு விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது. எனவே, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அனைத்து மாவட்டங்களிலும் நவ.1 முதல் நவ.10 வரை டிராக்டர் பேரணி நடத்தப்படும். மத்திய அரசு இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறாவிடில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பப் பெறப்படும்.
பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலச் சட்டப்பேரவைகளில் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் அம்சங்களுடன் கூடிய, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள ஆளும் அதிமுக அரசு, விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது. 3 வேளாண் சட்டங்களையும் தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று அதிமுக அரசு மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தமிழ்நாடு முதல்வரோ அமைதியாக இருக்கிறார். மத்திய பாஜக அரசின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் அதிமுக அரசு ஆதரவு அளிக்கிறது. கரோனா விவகாரத்தில் மத்திய பாஜக அரசும், தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக அரசும் தோல்வியடைந்துள்ளன.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், பெண்ணுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட நபரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நவ.9-ம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் தர்ணா நடத்தப்படும்.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் இணக்கமாக உள்ளன. திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெறும்
இவ்வாறு சஞ்சய் தத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் ஆயத்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திருச்சி வேலுச்சாமி, ஜவகர், சுபசோமு, சுஜாதா, வழக்கறிஞர் சரவணன், ரெக்ஸ், ஜெகதீஸ்வரி, ஜெயப்பிரியா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT