Published : 02 Nov 2020 03:45 PM
Last Updated : 02 Nov 2020 03:45 PM
புதுச்சேரியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டப்பேரவை எதிரில் சிலை அமைக்கப் புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் சிலையை நிறுவத் திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. தற்போது ஆளும் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளைத் திமுக கடுமையாக விமர்சித்து வந்தது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கூட்டணியின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்று இரு தரப்புக் கட்சி நிர்வாகிகளும் யோசனையில் இருந்தனர்.
தற்போது புதுச்சேரி வந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், "புதுச்சேரி, தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி தொடரும்" என்று கட்சி நிர்வாகிகளிடம் உறுதிப்படுத்தினார்.
இச்சூழலில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டத்தை வரும் 12- தேதியன்று புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்துகிறது.
அதேபோல் கருணாநிதிக்குச் சிலை அமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, கடந்த 28-ம் தேதி இரவு முதல் முறையாகக் கூடியது. அதைத் தொடர்ந்து சிலையை எங்கு நிறுவுவது, அதன் வடிவமைப்பு ஆகியவை குறித்து அக்குழு ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறையில் சிலை அமைப்புக் குழு இன்று மீண்டும் கூடியது. அதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, திமுக அமைப்பாளர்கள் எஸ்.பி. சிவக்குமார், சிவா எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சலிம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலர் ராஜாங்கம், விடுதலைச் சிறுத்தைகள் தேவ பொழிலன், தலைமைச் செயலர் அஸ்வினிகுமார் உள்ளிட்டோர் சட்டப்பேரவை எதிரே பாரதி பூங்காவிலுள்ள இடத்தைப் பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "கருணாநிதி சிலை அமைக்க அண்ணா சாலை, காமராஜர் சிலை எதிரே, நேரு சிலை மற்றும் சட்டப்பேரவை அருகில் என 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்நிலையில், இன்று சிலை அமைப்புக் குழு மீண்டும் கூடியது. இதில் சட்டப்பேரவை எதிரில் வெளி நுழைவுவாயில் அமைந்துள்ள பகுதிக்கு எதிரில் பாரதி பார்க் பூங்காவினுள் வரும் வகையில் கருணாநிதிக்குச் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கருணாநிதிக்குச் சிலை அமைத்த தமிழகத்தைச் சேர்ந்த ஸ்தபதியிடமே சிலை அமைப்பைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். 7.5 அடி உயரத்தில் சிலை அமைக்கவும் அதனை ஒரு பீடத்தின் மேல் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் சிலையை அமைக்கும் திட்டமுள்ளது." என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT