Last Updated : 02 Nov, 2020 02:58 PM

1  

Published : 02 Nov 2020 02:58 PM
Last Updated : 02 Nov 2020 02:58 PM

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த சூரியப்பிரகாசம், தமிழகம் முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கவும், விவசாயிகளிடமிருந்து நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது,"தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குனர் சுதாதேவி பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் தற்போது 862 நேரடி கொள்முதல் மையங்கள் உள்ளன. கரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 12.25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2.42 லட்சம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக 2,416 கோடி ரூபாய் விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மூடைக்கும் முப்பது நாற்பது ரூபாய் ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்று என்பது தவறான தகவல். குறுவை சாகுபடி நெல் கொள்முதலுக்காக செப்டம்பர் 30ஆம் தேதி வரை 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு , 1,725 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, "ஊடகங்கள் மூலமாகப் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மழையில் நனைந்து வீணானதை பார்க்க முடிந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல இடங்களில் சோதனை செய்து, பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் இது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும். அனைத்து அதிகாரிகளையும் குறிப்பிட்டு நீதிமன்றம் இந்தக் கருத்தைப் பதிவு செய்யவில்லை. லஞ்சம் பெற்று ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கே இது பொருந்தும்.

105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதில்மனுவில் குறிப்பிடும் போது கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைக்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்று என்பது முற்றிலும் தவறான தகவல் எனக்கூறுவது எப்படி?

இது நீதிமன்றத்திற்குத் தவறான தகவலை அளிப்பதாகாதா? என கேள்வி எழுப்பினர். அதிரடி சோதனை செய்தவர்கள் யார்? எவ்வளவு தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசுத்தரப்பில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சிறப்பு அதிரடி குழுவினர் என பதிலளிக்கப்பட்டது. மீண்டும் உறுதி செய்து தகவலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், 105 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா? வழக்கு பதியப்பட்டதா? எவ்வளவு தொகை பறிமுதல் செய்யப்பட்டது? என்பது குறித்து விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

"விவசாயிகள் இரவு, பகலாக உயிரைக்கொடுத்து உழைத்து விளைவிக்கும் நெல்லுக்கு உரிய மதிப்பளிக்கப்படுவதில்லை. அது ஊதியம் வாங்கும் அதிகாரிகளின் அரசு அதிகாரிகளின் ஊதியத்தை அவர்களின் கண்முன்னே கிழித்துப்போடுவதைப் போன்றது. விவசாயம் செய்ய தற்போது யாரும் முன்வருவதில்லை.

நமது நாட்டில் விவசாயம் அனாதை ஆக்கப்பட்டு வருகிறது. விவசாயப் பொருட்களுக்கு விலை கூடுகையில் மட்டும் அதை யாரும் ஏற்பதில்லை. விவசாயத்திற்காம செலவீனங்களை யாரும் கருத்தில் கொள்வதில்லை" எனவும் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, லஞ்சமில்லா நிர்வாகம் தொடர்பாக அறிக்கை அளித்தது. அதன் பரிந்துரைகளில் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஒவ்வொரு நிலையிலும் சொத்து விவரத்தை நிர்ணயம் செய்யக் கூறியது. அதனை அனைத்து துறை செயலர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x