Published : 02 Nov 2020 11:49 AM
Last Updated : 02 Nov 2020 11:49 AM
வெறுப்புணர்வைத் தூண்டி வாக்கு வங்கியாக மாற்றும் அரசியலை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
விளாத்திகுளம் அருகே பல்லாகுளம், துவரத்தை, கன்னிமார்கூட்டம், தத்தநேரி, வீரகாஞ்சிபுரம் கிராமங்களில் திமுக சார்பில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் கனிமொழி எம்.பி. பேசுகையில், "நாங்கள் வரும் போது மைக்கில் பேசியவர், கீதாஜீவன் அமைச்சராக இருந்தபோது தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.
இதே போல நன்றியை தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு சொல்ல முடியாது. தற்போது உங்களது எந்த கோரிக்கையும் அவர்களது காதில் விழாது. அப்படியே தப்பி தவறி இங்கு வந்து அவர்கள் காதில் விழுந்தாலும் செய்து கொடுக்க மாட்டார்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு இன்னும் 6 மாதங்கள் தான் ஆட்சி. அதன் பின்னர் வெற்றி பெற முடியாது. அதனால், தனக்கு தேவையானதை சம்பாதித்து விட்டு வீட்டுக்கு போய்விடலாம் என்ற முடிவோடு வேலை செய்து வருகின்றனர்.
அதனால்தான் தங்களுக்கு எங்கு லாபம் வரும் என்று தேடிக்கொண்டு இருக்கிறார்களே தவிர மக்களின் தேவைகலை நிறைவேற்றித் தருவதற்கு எந்தவிதமான முயற்சியும் அவர்கள் செய்வதில்லை.
எங்கு சென்றாலும் 100 நாள் வேலை முறையாக வழங்குவதில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ரேஷனில் பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை. முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. சாலை வசதி செய்து தருவதில்லை. மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த ஆட்சி தயாராக இல்லை.
விவசாயிகளை கார்பரேட் நிறுவனங்களிடம் மத்திய அரசு அடகு வைத்து விட்டது. கார்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கக்கூடிய சட்டங்களை மோடி அரசு உருவாக்கி உள்ளது. இதனை, தன்னை விவசாயி என கூறும் முதல்வர் வரவேற்றுள்ளார். இந்தச்சட்டங்களை எதிர்த்து போராடுவது, குரல் கொடுப்பது திமுக தான். தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டனர்.
நமது உரிமைகளைக் காப்பாற்ற, நியாயமாக நமக்குக் கிடைக்க வேண்டிய விஷயங்கள் தமிழகத்துக்கு வந்த சேர, அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி தரக்கூடிய ஆட்சி உருவாக வேண்டும். அது திமுகவின் ஆட்சி, தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். நீங்கள் சரியாக வாக்களிக்க வேண்டும்" என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களைப் பிரித்து, துவேசம், வெறுப்புணர்வைத் தூண்டி வாக்கு வங்கிகளாக மாற்றுவதைத் தமிழகம் என்றும் ஏற்றுக்கொள்ளாது. இதுபோன்ற அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை பாஜகவினர் புரிந்துகொள்ள வேண்டும். யாரும் எந்தக் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளலாம். ஆனால், அடிப்படையில் அந்த இயக்கம் எதற்காக நிற்கிறது, அதன் உண்மையான முகம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT