Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM

ரூ.4,500 கோடி செலவில் ஈசிஆர் வழியாக விழுப்புரம் - நாகை சாலை விரிவாக்க பணி: 2023-க்குள் முடிக்க மத்திய நெடுஞ்சாலை துறை திட்டம்

சென்னை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) வழியாக நாகப்பட்டினம் செல்லும் 165 கி.மீ. சாலையை ரூ.4,500 கோடியில் 4 வழி சாலையாக விரிவாக்கும்பணிகளை வரும் 2023-க்குள்நிறைவு செய்ய மத்திய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தின் பிரதானமான, நீண்ட சாலையாக இருப்பது சென்னை - கன்னியாகுமரி சாலை. இது விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக 750 கி.மீ. தூரத்துக்கு செல்லும் தேசிய நான்குவழிச் சாலை ஆகும். இந்த சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் கடும்போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, அத்தியாவசிய சரக்கு வாகனங்கள் விரைவாக செல்ல புதிய சாலை வசதியும் தேவைப்படுகிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டு,சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரியை இணைக்கும் மற்றொரு சாலையை மத்திய நெடுஞ்சாலைத் துறை மேம்படுத்தி வருகிறது. இதற்கான பணிகளை படிப்படியாக நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதில் முதல்கட்டமாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்துகிழக்கு கடற்கரை சாலை வழியாகநாகப்பட்டினம் செல்லும் தற்போதைய 2 வழி சாலையை 4 வழிசாலையாக விரிவாக்கும் பணி நடக்க உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

165 கி.மீ. தொலைவு

விழுப்புரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரியை இணைக்கும் சாலையை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், தற்போது நாகப்பட்டினம் வரையிலான 165 கி.மீ. சாலையை ரூ.4,500கோடி செலவில் 4 வழியாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

மொத்தம் 4 பிரிவுகளாக இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இதில், நாகப்பட்டினம் அருகே பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. மற்ற 3 பகுதிகளுக்கு விரைவில் டெண்டர் வெளியிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும். வரும் 2023-ம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதேபோல, நாகப்பட்டினத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான சாலை திட்டப் பணிகளை 2025-க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப, சாலைகட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாக உள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக ஒரு சாலை மட்டுமே இருப்பதால், வாகன நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நடக்கின்றன. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரியை இணைக்கும் சாலை மேம்படுத்தும் திட்டம் வரவேற்கக் கூடியது. இதனால், விபத்துகளும் குறையும். பயண நேரமும் ஒரு மணி நேரம் வரை குறையும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x