Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM
போதைப் பொருள் கடத்தல் கும்பல் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், இலங்கைக்கு சுற்றுலா சென்று வந்தவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் கொலை மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த அங்கொட லொக்கா, தமிழகத்தில் தலைமறைவாக இருந்தபோது கடந்த ஜுலை மாதம் கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதேபோல, போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த அலகாபெருமகா சுனில் காமினி என்ற பொன்சேகா (52), போலி பாஸ்போர்ட்டில் இலங்கையில் இருந்து தப்பி வந்து, தமிழகத்தில் தலைமறைவாக இருந்தார். அவரை கடந்த 13-ம்தேதி கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். இலங்கையைச் சேர்ந்த பிரபல தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த சுமார் 10 தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீஸான ‘இன்டர்போல்’ எச்சரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து அவர்களை பிடிக்க கியூ பிரிவு போலீஸார் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அங்கொட லொக்காமற்றும் பொன்சேகா ஆகியோருக்கு உதவி செய்தவர்களை பிடித்து கியூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் இலங்கை நபர்கள் வசிக்கும் பகுதிகளிலும், அகதிகள் முகாம்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பதுங்கி இருக்கும் இலங்கை நபர்கள் தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடலாம் என்றும், அதற்கு தமிழக கடற்கரை பகுதிகளை பயன்படுத்தலாம் என்றும் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும், இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்று வந்தவர்கள் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. சுற்றுலா விசாவில் சென்றவர்கள் நிஜமாகவே சுற்றுலாவுக்குதான் சென்றார்களா என்பது குறித்தும் இலங்கையில் அவர்கள் சந்தித்த நபர்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் தமிழக போலீஸாருக்கு உதவிசெய்து வருகின்றனர். இலங்கையில் இருந்து போதைப் பொருட்கள்கடத்தப்படுவது குறித்தும் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT