Published : 31 May 2014 10:29 AM
Last Updated : 31 May 2014 10:29 AM
சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவித்து, ஒட்டுமொத்த அமைதிக்கு சவாலாக இருப் போரைப் பட்டியல் போட்டு பிடிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கும்படி அரசிடம் இருந்து காவல் துறைக்கு கடும் நெருக்கடி வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போலீஸாரால் தேடப்படுபவர்களில் முக்கிய மானவர் ஸ்ரீதர்!
துபாயில் பதுங்கிய சாராய சக்கரவர்த்தி
ஸ்ரீதர்... மழித்த மீசையுடன் பார்ப்பதற்கு டீஸன்ட்டான தொழிலதிபர்போல காட்சி யளிப்பார். சுமார் 700 கோடி ரூபாய் சொத்துகள் இவருக்கு உண்டு என்றும் அதில் பெருமளவு சாராய சாம்ராஜ்யத்தால் கட்டப்பட்டது என்றும் போலீஸார் கூறுகின்றனர். காஞ்சிபுரத்தில் தொடங்கி புதுச்சேரிவரை இவரது சாராய சாம்ராஜ்யம் விரிந்துள்ளதாகவும், டெல்டா மாவட்டக் கூலிப்படை தொடங்கி... வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வரை இந்த ஸ்ரீதரின் கண்ணசைவில் கூலிப்படைகள் இயங்குவதாகவும் கூறப்படுகிறது.
44 வயதாகும் ஸ்ரீதர், காஞ்சிபுரம் மாவட்டம் திருபருத்திக்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர். 10-ம் வகுப்புவரை படித்துள்ளார். 1990-ம் ஆண்டுகளில் சக்கரவர்த்தி என்பவரது கட்டுப்பாட்டில் சாராய வியாபாரியாக தனது வாழ்க்கை யைத் தொடங்கியிருக்கிறார். பின்னாளில் சக்கரவர்த்தியின் மகளையே திருமணம் செய்து கொண்டு, தானே ஒரு சாராய ’சக்கரவர்த்தி’யாக உருவெடுத்தார். அன்று முதல் தனது சாராய சாம்ராஜ்யத்தை கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கத் தொடங் கினார் ஸ்ரீதர்.
உள்ளூர் போலீஸார் உதவி யுடன் கர்நாடக மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக எரிசாராயம் (ஸ்பிரிட்) கடத்திவரத் தொடங்கினார். காஞ்சிபுரம் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் மாவட்டத்தில் ஒரு பகுதி என தனது ஸ்பிரிட் தொழிலை விரிவாக்கம் செய்தார். நாளடைவில் ஸ்பிரிட் விற்பனை யில் புதுச்சேரிவரை மொத்த விற்பனையாளராக மாறினார் என்று விவரம் கூறுகிறார்கள் போலீஸ் துறையில்.
எதிரிகள் என்று தனக்கு எதிராக யார் கிளம்பினாலும், அவர்களை தன் பாதையிலிருந்து நீக்கிவிட்டுதான் மறுவேலை பார்ப்பார் என்று கூறுகிறார்கள் போலீஸார். சென்னை செங்குன்றம் அருகே அரசுப் பேருந்தில். போலீஸ் பாதுகாப்புடன் பயணித் துக் கொண்டிருந்த ரவுடி தேவராஜ் என்பவரை மிளகாய் பொடி தூவி கொலை செய்த சம்பவம் ஸ்ரீதரின் கைவரிசை. 6 கொலை, 6 கொலை முயற்சி, 3 வெடிபொருள் தடை சட்ட வழக்கு, 3 அடிதடி வழக்குகள் என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதியப்பட்டன.
ரியல் எஸ்டேட் தொழிலில் கூலிப்படையை அனுப்பி மிரட்டி நிலங்களை எழுதிவாங்கு வதாகவும் இவர் மீது புகார் உள்ளது. ’இவரை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய முடியாது. கேட்கும் நிலங்களை கொடுக்காதவர்கள் கூலிப்படை மூலம் மிரட்டப்படுகிறார்கள். இவருக்கு பயந்து போலீஸுக்கும் புகார் கொடுக்க தயங்குகிறார்கள்’ என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.
முதல் கொலை வழக்கு
ஸ்பிரிட் விற்பனையில் கொடி கட்டிப் பறந்த ஸ்ரீதருக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இந்த தகராறில் குட்டி என்ற ராஜேந்திரன், முருகன் ஆகியோருடன் சேர்ந்து 1999-ம் ஆண்டு ராமதாஸை தீர்த்துக்கட்டியதாக ஸ்ரீதர் மீது முதல் கொலை வழக்கு பாலுசெட்டிச்சத்திரம் போலீஸால் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றத்தால் ஸ்ரீதர் விடுவிக்கப்பட்டார்.
இதற்கு நடுவில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேச நாயக்கர் என்பவருடன் சாராய தொழிலில் போட்டி ஏற்பட்டது. கணேச நாயக்கரை கொலை செய்ய முயன்றதாக 2002-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஸ்ரீதர், குண்டர் சட்டத்தில் முதல்முறையாக சிறையில் அடைக்கப்பட்டார். காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் இவர் மீது “ஹிஸ்டரி ஷீட்” (குற்றவாளியின் பின்னணி தகவல்) திறக்கப்பட்டு போலீஸாரின் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டார்.
குண்டர் சட்டத்திலிருந்து வெளியே வந்த ஸ்ரீதரின் சாராய சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரக் காரணம், அந்த சமயத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி யாற்றிய போலீஸார்தான் என்றும் கூறப்படுகிறது. ஸ்பிரிட் விற்பனை யில், ஸ்ரீதரை தொழில்முறையாக எதிர்த்தவர்கள் போலீஸாரால் கைதுக்கு ஆளானார்கள். குறிப் பாக, அந்த சமயம் உயர்ந்த பொறுப்பில் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவரின் ஆசீர்வாதத் தால், ஸ்ரீதரின் சாராய சாம்ராஜ்யம் தடையின்றி வளர்ந்திருக்கிறது. இதற்கு கைமாறாக அந்த போலீஸ் அதிகாரிக்கு பங்களா பரிசாக கிடைத்தது என்றும் தகவல்கள் உள்ளன.
2007-ம் ஆண்டுகளில் ஸ்ரீதருக்கு தொழில் போட்டியாக புஞ்சை அரசந்தாங்கல் கிராம சாராய வியாபாரி கிருஷ்ணன் உருவெடுத் தார். அதைத் தொடர்ந்து அடுத் தடுத்து காஞ்சிபுரத்தில் இரண்டு முறையும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூசி பகுதியில் மூன்று முறையு மாக கிருஷ்ணனைக் கொல்ல முயற்சிகள் நடந்தன. ஐந்தாவது முயற்சியில் 2010-ம் ஆண்டு கிருஷ்ணன் படுகொலை செய்யப் பட்டார். அந்த சமயம், ’பாது காப்பாக’ வேலூர் சிறையில் இருந்தார் ஸ்ரீதர்! டெல்டா மாவட்டக் கூலிப்படை இந்த கொலையை செய்ததாக போலீஸ் அறிந்தது. ஸ்ரீதருடன் சேர்ந்து அந்த சமயம் சிறையில் இருந்தவர் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த கேபிரியல். (இவரைப் பற்றி ‘ஹலோ.. நான் கேபிரியேல் பேசுறேன்’ என்ற தலைப்பில் அண்மையில் ‘தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியானது). கிருஷ்ணன் கொலைக்குப் பிறகு ஸ்ரீதர் - கேபிரியேல் நட்பு மேலும் நெருக்கமாகி இருக்கிறது!
வேலூர் சிறையில் இருந்து கேபிரியேலும் ஸ்ரீதரும் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். சிறை மாற்றினாலும் இருவரின் நட்பு தொடர்ந்தது. ஸ்ரீதரின் ரியல் எஸ்டேட் வியாபாரம் தடையில் லாமல் நடக்க கேபிரியேலின் ஆட்களும், ஸ்ரீதரின் உறவினரான அரசு என்பவரும் தொடர்ந்து செயல்படுவதாகவும் போலீஸார் தகவல் திரட்டி உள்ளனர். மிரட்டல் மூலமாக பல சொத்துகள் பதிவு செய்யப் படுவதாக போலீஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
கேபிரியேல் சிறைக்குள்ளேயே இருக்க, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீதர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வெளியே வந்துவிட் டாலும்... தனது எதிரிகளால் எந்நேரமும் பழிவாங்கப்படலாம் என்ற எச்சரிக்கையுடன் இருக்கி றாராம். போலீஸாரின் கவனத் துக்கு வராமல் இருந்த பாஸ்போர்ட் மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நேபாளம் வழியாக ஸ்ரீதர் துபாய்க்கு பறந்தார். கடைசி நேரத்தில் இதனை மோப்பம் பிடித்த தமிழக போலீஸார், இன்டர் போல் போலீஸ் உதவியுடன் ஸ்ரீதரை கைது செய்தனர். சமீபத் தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீதர், துபாயில் இருந்தபடி தனது ரியல் எஸ்டேட் தொழிலை தடையில்லாமல் நடத்திவருகிறார் என்று கூறப்படுகிறது. இந்தியா வுக்கு வந்து போகும் சமயங் களில் பல காரணங்களால் ஸ்ரீதர் தலைமறைவாகவே நடமாடுவதாக வும்... ரகசிய பண்ணை பங்களாக் கள், அடியாட்கள் பாதுகாப்பு, ரகசிய பயணங்களால் ஸ்ரீதர் தப்பி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
அடுக்கடுக்கான வழக்குகளைக் காரணம் காட்டி ஸ்ரீதரை இந்தியா வுக்கு கொண்டுவர காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் தற்போது நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஆனால், ஸ்ரீதரின் விசுவாசிகள் பலர் இன்னமும் காஞ்சிபுரம் போலீஸில் இருப்பதால், அவரை வளைக்கும் திட்டங்கள் ‘லீக்’ ஆகி, உஷாராக தப்பி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT