Published : 01 Nov 2020 08:48 PM
Last Updated : 01 Nov 2020 08:48 PM
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு வகித்த வேளாண் துறை, அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் துரைக்கண்ணு மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 14-ம் தேதி விழுப்புரத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை காவேரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 25-ம் தேதி அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்தது. அப்போது முதல் அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து, தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு இருந்த நிலையில், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (அக். 31) இரவு 11.10 மணி அளவில் துரைக்கண்ணு காலமானார்.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
அவரது உடல், இன்று (நவ. 1) மாலை, அவரது சொந்த கிராமமான, தஞ்சை மாவட்டம் வன்னியடி கிராமத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு மூத்த அமைச்சர்கள், குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், துரைக்கண்ணு மறைவு காரணமாக, அவர் வகித்த வேளாண் துறை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி அளித்த பரிந்துரையை அடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். இந்த அறிவிப்பை, ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் இன்று வெளியிட்டுள்ளார்.
அதில், ''துரைக்கண்ணு மறைவு காரணமாக அவர் வகித்த வேளாண் துறை, முதல்வரின் பரிந்துரையை ஏற்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் ஒப்படைக்கப்படுகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT