Published : 01 Nov 2020 06:37 PM
Last Updated : 01 Nov 2020 06:37 PM
கேக், பிஸ்கெட், சாக்லெட், சர்க்கரை கலந்த உணவுகளை சாப்பிடுவதால் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் பால் பல் சொத்தை பிரச்சினையை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகின்றனர், கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.
கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் (டிஇஐசி) செயல்பட்டு வருகிறது. இங்கு 18 வயது வரையுள்ளவர்களின் பல நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சைக்கு வழிவகை செய்து வருகின்றனர். இதற்கு பிரத்தியேமாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மையம் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 9,600 குழந்தைகளுக்கு பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 3,500-க்கும் மேற்பட்ட பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகளிடையே அதிகரித்து வரும் பால் பல் சொத்தை பிரச்சினையை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக டிஇஐசி மையத்தின் குழந்தைகள் பல் மருத்துவர் சரண்யா கூறியதாவது:
"சொத்தைப் பல் ஏற்பட்டால் அதை சரிசெய்வது கடினம். ஆனால், வராமல் தடுப்பது எளிது. அண்மைக் காலமாக குழந்தைகளுக்குப் பால் பல் சொத்தை ஏற்படுவது அதிகரித்து வருகிறது. பால் புட்டியுடன் குழந்தையை உறங்க வைப்பது, பல்லில் ஒட்டும் தன்மைகொண்ட பிஸ்கெட், சாக்லேட், கேக் போன்ற திண்பண்டங்களை அடிக்கடி உண்பது, சர்க்கரை அதிகமுள்ள பால், குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதன் மூலம் குழந்தைகளின் பற்களில் சொத்தை ஏற்படுகிறது.
இவ்வாறு சொத்தை ஏற்பட்டு அதை கவனிக்காமல்விட்டால் வலி ஏற்படும். சரியாக உணவு அருந்த முடியாது. இதனால், சத்தான உணவு கிடைக்காமல் குழந்தைகளின் உடல் எடை குறையும். நிறைய பற்கள் சொத்தையாக இருப்பவர்களுக்கு இதய நோய், சளி, காய்ச்சல், தோல் அரிப்பு, தடிப்பு, முகம் வீங்குதல், கண்களில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சீரான மூளை வளர்ச்சி தடைபடும். எனவே, சிறு வயதிலேயே பற்களை முறையாக பராமரிப்பது அவசியம்.
பல் துலக்குவது அவசியம்
குழந்தைகளுக்குப் பால் புகட்டியவுடன் ஈறுகளை துணியால் துடைத்துவிட வேண்டும். முதல் பல் முளைத்தவுடன் பல் துலக்குவதை தொடங்க வேண்டும். 2 வயதுக்கும் மேல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் இரண்டுமுறை பற்களை பெற்றோர் சுத்தம் செய்துவிட வேண்டும். குழந்தைகள் தானே துப்ப தெரிந்துகொள்ளும்வரை பற்பசையைப் பயன்படுத்த வேண்டியதில்லை. வெறுமனே 'பிரஷ்' வைத்து பற்களை சுத்தம் செய்துவிட்டால் போதும். பற்பசை பயன்படுத்தத் தொடங்கும்போது அரிசி அளவு பயன்படுத்தினால் போதும். பின்னர், பட்டாணி அளவு பற்பசையை பயன்படுத்தலாம். மேலும், உணவு உண்டபிறகு வாய் கொப்பளிக்கும் பழக்கதை ஏற்படுத்த வேண்டும்.
பற்களை பிடுங்க வேண்டிய நிலை
கரும்பு, கடலை உருண்டை போன்றவைற்றை உட்கொண்டால்தான் குழந்தைகளின் பால் பற்கள் தன்னிச்சையாக உதிர்ந்து நிலையான புதிய பற்கள் முளைக்கும். ஆனால், துரித உணவுகள் யாவும் கடினத்தன்மை கொண்டவை அல்ல. கேக், பிஸ்கெட் போன்றவை வெறும் மாவுப் பொருட்களாக உள்ளன.
குழந்தைகளின் பற்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் நிலையான பற்கள் வளர ஏதுவாக, பால் பற்கள் தானே விழுவதில்லை. பற்களை செயற்கையாக பிடுங்க வேண்டிய நிலை அதிகரித்து வருகிறது. அவ்வாறு அகற்றாவிட்டால் இரு வரிசைகளில் பற்கள் முளைக்கும். பால் பற்களை சரியாக பராமரித்தால்தான் பற்களின் வளர்ச்சியும், தாடை வளர்ச்சியும் சீராக இருக்கும்.
இதுதவிர, குழந்தைகளின் விரல் சப்புதல் பழக்கம், வாய் வழியாக சுவாசித்தல், குறட்டை விடுவது ஆகியவற்றுக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம். இதுவரை 80 குழந்தைகளுக்கு இந்த பழக்கங்களை கட்டுப்படுத்தி சீர் செய்துள்ளோம். இந்த சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவமனையின் டீன் பி.காளிதாஸ், பச்சிளங் குழந்தைகள் துறைத் தலைவர் பூமா, டிஇஐசி மைத்தின் மருத்துவ அதிகாரி ரவிசங்கர், குழந்தைகள் நல மருத்துவர் முகமது அன்சர் அலி, பல் மருத்துவ ஆய்வாளர் வினீத்ராஜ் ஆகியோர் உறுதுணையாக உள்ளனர்".
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT