Last Updated : 01 Nov, 2020 06:22 PM

 

Published : 01 Nov 2020 06:22 PM
Last Updated : 01 Nov 2020 06:22 PM

வேளாண்மை அமைச்சர் துரைக்கண்ணு உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்; துணை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி

மூவர்ணக் கொடி போர்த்தப்பட்ட அமைச்சரின் உடல்

தஞ்சாவூர்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள வன்னியடி கிராமத்தில் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (அக். 31) இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து, இவரது உடல் ராஜகிரி கிராமத்துக்கு இன்று (நவ. 1) பிற்பகல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு, வீட்டின் முன் சில நிமிடங்கள் வாகனத்திலேயே வைக்கப்பட்டது.

தொடர்ந்து, வீட்டின் பின்புறம் உள்ள அய்யனார் கோயில் திடலில் இவரது உடல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலுக்கு மூவர்ணகொடி போர்த்தப்பட்டது.

பின்னர், துரைக்கண்ணுவின் படத்துக்கு தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி (உள்ளாட்சித் துறை), பி.தங்கமணி (மின்சாரத் துறை), ராஜேந்திரபாலாஜி (பால்வளத்துறை), கே.ஏ.செங்கோட்டையன் (பள்ளிக் கல்வித்துறை), ஆர்.காமராஜ் (உணவுத்துறை), கே.பி. அன்பழகன் (உயர் கல்வித் துறை), ஓ.எஸ்.மணியன் (கைத்தறித் துறை), வெல்லமண்டி என்.நடராஜன் (சுற்றுலாத் துறை), உடுமலை ராதாகிருஷ்ணன் (கால்நடை பராமரிப்புத் துறை), எஸ்.வளர்மதி (பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை), மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், வன்னியடி கிராமத்தில் துரைக்கண்ணுக்கு சொந்தமான தென்னை தோப்பில் கரோனா விதிமுறைப்படியும், அரசு மரியாதையுடனும், காவல் துறையினர் 63 குண்டுகள் முழக்கத்துடனும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து 3 முறை வென்றவர்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட ராஜகிரியைச் சேர்ந்த துரைக்கண்ணு (72) இளங்கலைப் பட்டப்படிப்பு (பி.ஏ.) படித்தவர். தொடக்கத்தில் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றிய இவர் 1972-ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். கிளைக் கழகச் செயலர், மாணவரணி, இளைஞரணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் எம்ஜிஆர் காலத்திலேயே பாபநாசம் ஒன்றியக் கழகச் செயலரானார். இதேபோல, ஜெயலலிதா காலத்திலும் ஒன்றியச் செயலராகப் பதவி வகித்த இவர் சில ஆண்டுகளாக தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலராக இருந்து வந்தார். இதனிடையே, மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவராகவும் இருந்தார்.

இவர் 2006 - 2011 ஆம் ஆண்டுகளிலும், 2011 - 2016 ஆம் ஆண்டுகளிலும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். இதே தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் வேளாண் துறை அமைச்சரானார்.

இவருக்கு மனைவி பானுமதி, 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் சிவவீரபாண்டியன் வேளாண் துறையில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் அய்யப்பன் என்கிற சண்முகபிரபு தற்போது மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலராக உள்ளார்.
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.ஹெச்.எம். ஜெயராம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். துரைக்கண்ணுவின் வீடு தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை ஓரத்திலேயே உள்ளதால், பொதுமக்கள் அதிகளவில் அஞ்சலி செலுத்த குவிந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x