Published : 01 Nov 2020 04:17 PM
Last Updated : 01 Nov 2020 04:17 PM
தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்கள் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு அரசு அலோபதி சங்கம் ஆகிய 4 சங்கங்களை ஒருங்கிணைத்து, ஒரே சங்கமாக்கும் நடவடிக்கைகளை 4 சங்க பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக 4 சங்கங்களின் நிர்வாகிகளை உள்ளடக்கிய தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்கள் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தியுள்ளனர். இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜாராம் தலைமையில் திருச்சியில் இன்று (நவ. 1) நடைபெற்றது.
இதில், மருந்தாளுநர் சங்கங்களை ஒருங்கிணைப்பது, ஏற்கெனவே உள்ள சங்கங்களின் பதிவை ரத்து செய்வது, ஒருங்கிணைப்புக் குழுவுக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், "தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிதாக திறக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருந்தாளுநர்களை பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும். முதல்வர் அறிவித்துள்ள 2,000 மினி கிளீனிக்குகளில் மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மருந்தாளுநர் பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 4 மணி ஆக நடைமுறைப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு அலுவகலம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட 9 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் நகர்ப்புற மருந்தாளுநர்கள் 39 பேரை பணி வரன்முறை செய்ய வேண்டும். அவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலைமை மருந்தாளுநர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும். நோயாளிகளின் வருகை அதிமுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலாக மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும். தேசிய குழந்தை நலத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட 805 பேர் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 200 பேர் ஆகிய மருந்தாளுநர்களை அடிப்படை தகுதித் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மருந்தாளுநர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும். மருந்தாளுநர்களுக்கு தலைமை மருந்தாளுநர், துணை மருந்து ஆய்வாளர், மருந்துக் கிடங்கு அலுவலர், துணை இயக்குநர் (மருந்தாளுநர்) ஆகிய பதவி உயர்வுகளை அளிக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மருந்தாளுநர் சங்கங்களைச் சேர்ந்த பேச்சியப்பன், முருகானந்தம், சத்தியபாமா, ரவி, தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...