Last Updated : 01 Nov, 2020 12:44 PM

1  

Published : 01 Nov 2020 12:44 PM
Last Updated : 01 Nov 2020 12:44 PM

புதுச்சேரியின் தனித்தன்மையைக் காக்க உயிர் தியாகம் செய்யத் தயார்: முதல்வர் நாராயணசாமி பேச்சு

தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தும் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி

புதுச்சேரியின் தனித்தன்மையைக் காக்க உயிர் தியாகம் செய்யத் தயார் என்று, முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சிக்குள் இருந்தபோது புதுவை மாநிலம் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரெஞ்சு ஆட்சியில் இருந்து புதுவை கடந்த 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விடுதலை அடைந்தது. அன்றைய தினம் புதுவை ஆளுநர் மாளிகையில் பிரெஞ்சு கொடி கீழ் இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இந்த நாளை புதுவையின் விடுலை நாளாக அரசு கொண்டாடி வருகிறது. இதன்படி, புதுவை அரசு சார்பில் விடுதலை நாள் விழா கடற்கரை சாலை காந்தி திடலில் இன்று (நவ. 1) நடைபெற்றது. அவ்விழாவில் பங்கேற்க முதல்வர் நாராயணசாமி காந்தி திடலுக்கு வந்தார். அங்கிருந்த கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை அவர் ஏற்றினார். பின்னர் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட அவர் மேடைக்குத் திரும்பினார்.

தொடர்ந்து, விடுதலை நாள் உரையில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

"மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி விழுப்புரத்தில் இருந்து புதுவை வரை 4 வழிசாலைத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் புதுவை-திண்டிவனம் சாலை போன்று புதுவை-விழுப்புரம் சாலையும் உருவாகும். அரியூர் முதல் இந்திராகாந்தி சதுக்கம் வரையிலான சாலையை அகலப்படுத்தவும், மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர ராஜீவ்காந்தி சதுக்கம் அருகிலும், இந்திராகாந்தி சதுக்கம் அருகிலும் தனித்தனியாக மேம்பாலம் அமைக்கவும், ரூ.5 கோடியில் சுண்ணாம்பாறு நடைபாதை திட்டம், காரைக்காலில் சாலைகளை அகலப்படுத்தும் திட்டம், மாஹே புறவழிசாலைத் திட்டம், ஆகியவற்றுக்கும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்

திருக்காஞ்சியில் சங்கராபரணி பாலம் விரைவில் திறக்கப்படும். காமராஜர் மணிமண்டபம் பணிகள் ஜனவரி மாதத்திற்குள் முடிவடைந்து திறக்கப்படும். இதேபோல், கடற்கரைச் சாலை பழைய சாராய ஆலை இருந்த இடத்தில் பாரம்பரிய கலாச்சார மையம், முருங்கம்பாக்கத்தில் அருங்காட்சியகமும் விரைவில் தொடங்கப்படும். ரோடியர் மைதானம், அவ்வை திடல், மணிமேகலை பள்ளி உள்ளிட்ட 10 இடங்களில் ரூ.15 கோடி செலவில் வாகன நிறுத்துமிடம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதுவை-கடலூர் இடையே ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும் திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து கேரளத்திற்கு அகல ரயில் பாதை அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகப்படியான கரோனா பரிசோதனை செய்யும் மாநிலங்களில் புதுவை மாநிலமும் ஒன்றாக திகழ்கிறது.

பயன் கருதாத பலரது தியாகத்தினால் இந்த விடுதலை கிடைத்துள்ளது. விடுதலையின் பயன்கள் மக்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பது தியாக தலைவர்களின் கனவு. அதை நிறைவேற்றித் தருவது எங்களது கடமை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதனை முறியடித்து மக்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக வளமாக நலமாக வாழ்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பதை கடமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். இதற்காகவும் புதுவையின் தனித்தன்மையை உரிமைகளை பாதுகாக்கவும் உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக உள்ளதாக சூளுரைக்கிறேன். வரும் காலத்திலும் இதே உறுதியோடு செயல்படுவோம்".

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து, புதுவை காவல்துறையின் பாதுகாப்பு படை உட்பட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. மேடையில் இருந்து முதல்வர் நாராயணசாமி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், எம்.பி-க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், எம்எல்ஏ-க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜான்குமார், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, சாமிநாதன், சங்கர், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், அரசு செயலாளர்கள் சுர்பித் சிங், அன்பரசு, அருண், தேவேஷ்சிங், அசோக்குமார், டிஜிபி பாலாஜிஸ்ரீ வத்சவா மற்றும் தியாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x