Published : 01 Nov 2020 03:12 AM
Last Updated : 01 Nov 2020 03:12 AM
”தென்னிந்திய சூழலுக்கு பொருத்தமான, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பயிராக வெணிலா பயிர்வகை இருக்கும்” என்று வெணிலா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபடும் எக்ஸ்போவன் (Expovan) நிறுவனத்தின் தலைவரும் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவருமான ஆர்.மகேந்திரன் தெரிவித்தார்.
தொழில்முறை மருத்துவரும் விவசாயியுமான மகேந்திரன், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கழக கூட்டமைப்பு (FICCI)ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில்,‘வெணிலா சாகுபடி: விவசாயிகளுக்குக் கிடைக்கக் கூடிய பொருளாதார நன்மைகள்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்வில் அவர் பேசியதாவது:
இந்தியாவில் 60 சதவீதத்துக்கு மேற்பட்டோர் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் வாழ்கின்றனர். விவசாய வருமானத்தை அதிகரிக்க அரிசி, கோதுமை, தேங்காய், காய்கள், கனிகள் போன்ற மரபார்ந்த பயிர்களை மட்டுமல்லாமல் பல்வேறு புதிய பயிர்களையும் அதிகமாகப் பயிரிடத் தொடங்க வேண்டும்.
இத்தகைய பல்வகைப் பயிர் சாகுபடியில் தென்னிந்திய பருவநிலைக்கு மிகவும் பொருத்தமான வெணிலா முக்கியப் பங்கு வகிக்கிறது. 15-ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட வெணிலா 18-ம் நூற்றாண்டில் சாகுபடி செய்யப்படத் தொடங் கியது.
இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு பிரிட்டிஷ் அரசால் 1846-ல் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அது பரவலாகவில்லை என்றாலும்1997 முதல் 2007 வரை இந்திய விவசாயிகள் 300 மெட்ரிக் டன் வெணிலா பயிர் செய்து சாதனை படைத்தனர். ஆனால் வெணிலாவை சரியாக சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அல்லது அவைபற்றித் தெரியாததால் இந்திய விவசாயிகள் வெணிலாவைக் கைவிடத் தொடங்கினர். ஆனால் இப்போது வெணிலாவை சந்தைப்படுத்துவதற்கும் இறுதி பயனர்களிடம் கொண்டு சேர்ப்பதற்குமான நிறுவனங்கள் அதிகரித்துவிட்டன.
வெணிலா பயிருக்கு 10 டிகிரி முதல் 32-33 டிகிரி வரையிலான வெப்பநிலையே உகந்தது. எனவேஊட்டி, குன்னூர் போன்ற மலைஉச்சிப் பகுதிகள் தவிர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் வெணிலா சாகுபடிக்கு உகந்தவைதான். வெணிலா பயிர்களுக்கு ஓர்ஏக்கருக்கு நாளொன்று அதிகபட்சம் 2 ஆயிரம் லிட்டர் நீர் பாய்ச்சினால் போதும்.
உயர் தரமான மண்ணாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மட்டை. சோகை, காஞ்சை போன்ற கழிவுப் பொருட்களைக் கொண்டே இந்தப் பயிரை வளர்க்க முடியும். உரங்களும் தேவையில்லை. இயற்கை விவசாயம் என்றால் மாதம் ஒன்றிரண்டு தடவை பஞ்ச கவ்யம் தெளித்தால் போதும்.
உணவுப் பொருட்கள் பலவற்றில் வெணிலா ஃப்ளேவர் சேர்க்கப்படுகிறது. இவற்றில் 95% செயற்கையான கலவைகளால் உருவாக்கப்பட்ட வெணிலாதான் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்தின் மூலம் கிடைக்கும் இயற்கையான வெணிலாவுக்கான தேவை உலக அளவில்அதிகரித்துள்ளது. அதை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. வெணிலா சாகுபடியில் 5-ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் பெற முடியும். இவ்வாறு மருத்துவர் மகேந்திரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT