Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
தீபாவளி பண்டிகைக்கு எதிர்பார்த்த விற்பனை இல்லாததால் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு 35 சதவீதம் குறைந்துள்ளது.
சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், உப தொழில்கள் மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது.
ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத் தடை இல்லை. ஆனால், பட்டாசு தயாரிக்க முக்கிய மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படும் பேரியத்துக்கும், சரவெடி தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இனி அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இத்தீர்ப்பின் எதிரொலியாக கடந்த தீபாவளிக்குப் பிறகு சிவகாசியில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகள் 3 மாதங்கள் மூடப்பட்டன. இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒன்றரை மாதங்கள் பட்டாசு ஆலைகள் அடைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 50 சதவீத தொழிலாளர்களைக் கொண்டு பட்டாசு தயாரிக்க அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு பட்டாசு தயாரிப்பு 35 சதவீதம் குறைந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ஆசைத்தம்பி கூறியதாவது: தற்போது பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டாலும் எதிர்பார்த்தஆர்டர்கள் இல்லை. இதனால் பெரும்பாலான பட்டாசு ஆலைகளில், தயாரிப்பு குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 65 சதவீதம் மட்டுமே பட்டாசு தயாரிக்கப்பட்டுள்ளது. 35 சதவீத பட்டாசுகள் தயாரிக்கப்படவில்லை என்றார்.
மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி கூறும்போது, “தமிழகத்தில் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் பட்டாசுக்கான ஆர்டர்கள் போதிய அளவில் இல்லை. தீபாவளிக்கு 2 வாரங்களே உள்ள நிலையில் இதுவரை கடைகளில் பட்டாசு விற்பனை களைகட்டவில்லை. விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால் சில ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT