

கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை குறையாமல் உயர்ந்தே நீடித்து வருகிறது. எல்லா காய்கறிகளும் கிலோ ரூ.20-க்கு மேல் விற்பனையாகி வருகின்றன.
திருமழிசையில் காய்கறி சந்தை தற்காலிகமாக இயங்கி வந்ததால், அங்கு இருப்பு வைக்க போதிய இடவசதி இல்லை. இதன் காரணமாக காய்கறிகள் அளவோடு வரவழைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனால் காய்கறி விலை உயர்ந்திருந்தது. கூடுதல் நேரம் செலவிட்டு, கூடுதல் தூரம் பயணித்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி வந்ததால், அவர்களும் விலையை ஏற்றி விற்றனர். இதனால் காய்கறி செலவு பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. இதற்கிடையே காய்கறி சந்தை கோயம்பேட்டில் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், அங்கு காய்கறிகளின் விலை குறையவில்லை. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.20 மேல் விற்பனை செய்யப்படுகின்றன.
நேற்றைய நிலவரப்படி, தக்காளி, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய் தலா ரூ.25, முள்ளங்கி ரூ.20, வெங்காயம் ரூ.70, சாம்பார் வெங்காயம் ரூ.100, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், பீன்ஸ், பீட்ரூட் ஆகியவை தலா ரூ.45, பச்சை மிளகாய், பாகற்காய் தலா ரூ.35, கேரட் ரூ.85, முருங்கைக்காய் ரூ.60 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை குறையாமல் இருப்பது தொடர்பாக மொத்த வியாபாரிகள் கூறியதாவது:
கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவில் காய்கறிகள் வருகின்றன. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் அப்பகுதிகளில் கனமழை பெய்ததால், காய்கறிகள் உற்பத்தி குறைந்து, கோயம்பேடு சந்தைக்கு வரத்தும் குறைந்துள்ளது. அதன் காரணமாக விலை உயர்வு நீடித்து வருகிறது. தீபாவளிக்குப் பிறகு விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.