Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்க கூடாது: முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை

அவதூறு பரப்புவதாக பாஜக உள்ளிட்ட அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

வேல் யாத்திரைக்கு தமிழக அரசுஅனுமதி அளிக்கக் கூடாது எனவிசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவினர் திருமாவளவன் மீது அவதூறு பரப்புவதாக கூறி, விசிக சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோர் பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: சமூக வலைதளங்களில் மனுதர்மம் குறித்து நான் பேசிய கருத்தை, உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்த்துவிட்டனர். இணையத்தில் அதிகமாக தற்போது தேடப்படும் வார்த்தை மனுதர்மம்தான். மனுதர்மத்தில் நான் கூறிய கருத்துகள் இல்லை என்று நிரூபிக்க முடியவில்லை. பெண்களை இழிவுபடுத்தி யார் எழுதிய நூலாக இருந்தாலும் தடைசெய்ய வேண்டும். மேலும் மனுதர்மம் குறித்து உலகளாவிய விவாதம் விவாதிக்கப்படுகிறது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

உடனடியாக, தேர்தல் வராமல் இருந்திருந்தால் அல்லது திமுக கூட்டணியில் நான் இல்லை என்றால், மனுதர்மம் நூலைப் பற்றி நான் கூறியதை பெரிதுபடுத்தி இருக்க மாட்டார்கள். நாங்கள் கொள்கை பிடிப்பு உள்ளவர்கள். அதனால் எங்கள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. என்னை எதிர்ப்பது அவர்களது நோக்கம் இல்லை. திமுகவை எதிர்ப்பதற்காகத்தான். பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x