Published : 31 Oct 2020 07:50 PM
Last Updated : 31 Oct 2020 07:50 PM
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இலவச விவசாய மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்விநியோகம் செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்தனர்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு தக்கல் முறையில் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகேயுள்ள பூவுடையார்புரத்தைச் சேர்ந்த விவசாயியான முத்துலிங்கம் இலவச விவசாய மின் இணைப்பு கேட்டு தக்கல் முறையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் விண்ணப்பம் செய்தார்.
இதையடுத்து அவருக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்குவதற்காக அவரிடம், திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் பொன் கருப்பசாமி ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
முதலில் மறுத்த முத்துலிங்கம் பின்னர் பணத்தை கொடுப்பதற்கு சம்மதித்தார். அதேநேரத்தில் இது தொடர்பாக முத்துலிங்கம் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து முத்து லிங்கத்திடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளனர். அந்த பணத்துடன் இன்று காலை முத்துலிங்கம் திருச்செந்தூர் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.
செயற்பொறியாளர் பொன் கருப்பசாமி இருக்கும் அறைக்கு சென்று அவரிடம் ரசாயனம் தடவிய பணம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பொன் கருப்பசாமியை கையும் களவுமாக கைது செய்தனர். தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) எஸ்கால் தலைமையில் ஆய்வாளர் ஜெயஸ்ரீ, சிறப்பு ஆய்வாளர் பாண்டி மற்றும் போலீசார் செயற்பொறியாளர் பொன் கருப்பசாமியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரது அலுவலகம் மற்றும் வீட்டிலும் சோதனை நடத்தினர். பின்னர் அவரை தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT