நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்தது ஏன்? தரமற்ற பொருட்கள் காரணமா? - தினகரன் கேள்வி

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்வதால் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டுமானம் இடிந்து விழுந்ததா என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகப் பின்புறம் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடத்தின் போர்டிகோ நேற்று (அக். 30) காலை 6 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. காலை வேளை என்பதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாலேயே, கட்டிடம் இடிந்து விழுந்ததாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (அக். 31) தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளின்போதே புதிதாகக் கட்டப்பட்ட தூண் உள்ளிட்டவை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும், அதில் 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஆனால், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விபத்து நடைபெறவில்லையென்றும், அதிகாரிகள்தான் அதனை இடித்துத் தள்ளினார்கள் என்றும் கூறியிருக்கிறார். அப்படியானால் விபத்து நடந்ததாகத் தகவல் வெளியானதும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவசர அவசரமாக அங்கு சென்று பார்வையிட்டது ஏன்?

தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்வதால் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டுமானம் இடிந்து விழுந்ததா? இல்லை, திட்டமிடாமல் பணிகளைச் செய்ததால் இடித்துத் தள்ளப்பட்டதா? என்ற மக்களின் சந்தேகங்களுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும்.

மக்களின் வரிப் பணத்தில் செய்யப்படும் கட்டுமானத்தில் நிகழும் இத்தகைய தவறுகளுக்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in