Published : 31 Oct 2020 04:15 PM
Last Updated : 31 Oct 2020 04:15 PM
பாஜகவின் மதவெறி சக்தியையும், பிளவுபடுத்தும் சக்தியையும் முறியடிக்க வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார்.
ஏஐடியுசி. நூற்றாண்டு நிறைவு விழா கோவில்பட்டியில் நடந்தது. ஏஐடியுசி பஞ்சாலை தொழிற்சங்கத்தின் ஜீவா இல்லம் முன்பு நடந்த விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் எஸ்.அழகுமுத்துபாண்டியன் தலைமை வகித்தார்.
விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், சுதந்திரp போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு ஏஐயுசி. கொடியேற்றி வைத்து பேசினார்.
விழாவில், நகரச் செயலாளர் அ.சரோஜா, தாலுகா செயலாளர் ஜி.பாபு, தொழிற்சங்கத்தை சேர்ந்த என்.குருசாமி, பி.பரமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆர்.நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறும்போது, "சுதந்திர இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்பது தான் அரசமைப்பின் அடிப்படைத் திட்டம்.
இந்தத் திட்டத்தை மறுக்கவோ, மாற்றவோ கூடாது. பாஜக வேல் யாத்திரை நடத்துவது அவர்களது கொள்கை. ஆனால், மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யக்கூடாது.
எங்களது மதச்சார்பற்ற கூட்டணி, பாஜக எதிர்ப்புக் கூட்டணி உறுதியாக உள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் தான் எத்தனை தொகுதிகள் எங்களுக்கு என முடிவெடுக்கப்படும். எங்களது கோரிக்கை என்பது ஒன்றுபட்டு போராடுவது. பாஜகவின் மதவெறி சக்தியையும், பிளவுபடுத்தும் சக்தியையும் முறியடிக்க வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது. கோவில்பட்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் பேட்டியிட கேட்போம். ஆனால், பேச்சுவார்த்தையில் தான் உறுதி செய்யப்படும்.
தமிழகத்தில் அதிமுகவுக்கு அரசு கட்டமைப்பு பற்றி கவலையில்லை. அவர்களுக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் நோக்கமாக இருக்கிறது. தமிழகத்தைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. அவர்கள் ஆட்சியைப் பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்களே தவிர, சட்டம் என்ன இருக்கிறது. அதனை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற கவலை இன்றைக்கு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT