Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

மக்கள் குறைகளை தெரிவிக்க செல்போன் செயலி விரைவில் அறிமுகம்: தருமபுரி ஆட்சியர் தகவல்

தருமபுரி புதிய ஆட்சியர் கார்த்திகா.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் மலைக் கிராம மக்கள் உள்ளிட்டோர் செல்போன் செயலி மூலம் தங்கள் குறைகளை ஆட்சியருக்கு தெரிவிக்கும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என புதிய ஆட்சியர் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னையில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த கார்த்திகா, தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது:

தருமபுரி மாவட்டம் அதிக மலைக் கிராமங்களை கொண்டது. எனவே, மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்க நெடுந்தூரம் அலைந்து ஆட்சியர் அலுவலகம் வரை வரும் நிலை உள்ளது. இதுதவிர, தற்போது கரோனா தொற்று பரவல் சூழலும் நீடித்து வருகிறது.

இந்நிலையில், மலைக் கிராம மக்கள் உட்பட மாவட்ட மக்கள் ஆட்சியருக்கு தங்கள் குறைகள் தொடர்பாக மனுக்கள் அனுப்ப விரைவில் செல்போன் செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள், குறைகள் குறித்து ஆட்சியருக்கு நேரடியாக மனு அனுப்பலாம். மனு பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மனுக்கள் உரிய துறைக்கு அனுப்பப்பட்டு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. தகுதியான ஏழை, எளிய பயனாளிகளுக்கு இந்த வீடுகள் வழங்கப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை, மகளிருக்கு மானிய விலையிலான இருசக்கர வாகன திட்டம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எண்ணேகொல்புதூர் நீர்ப்பாசன திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்த திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகப் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமையவுள்ள பகுதியின் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் இங்கே ஜவுளிப் பூங்கா அமைத்து தருமபுரி மாவட்ட இளையோருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் தற்போது விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதற்காக ரூ.450 கோடிக்கு மத்திய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறியதும், மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் கூடுதலாக வழங்கப்படும். தருமபுரி மாவட்ட பாசன தேவைக்காக ஒகேனக்கல் உபரிநீரை வழங்கும் திட்டத்தை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் பகுதி-2 உடன் சேர்த்து நிறைவேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x