Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

ரூ.16.37 கோடியில் 7 ஷட்டர்கள் பொருத்தும் பணி நிறைவு: முழு கொள்ளளவு தண்ணீரை சேமிக்க செண்பக தோப்பு அணை தயார் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தகவல்

செண்பகத் தோப்பு அணையில் ஷட்டர்கள் பொருத்தப்பட்ட பணியை நேற்று ஆய்வு செய்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன். அருகில், ஆட்சியர் கந்தசாமி, எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத் தோப்பு அணையில் ரூ.16.37 கோடியில் 7 ஷட்டர்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்று முழு கொள்ளளவு தண்ணீரை சேமிக்க அணை தயாராக உள்ளது என அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் அருகே உள்ள செண்பகத் தோப்பு அணை கட்டுமானப் பணி கடந்த 2001-ல் நடைபெற்றது. இந்தப் பணி கடந்த 2007-ல் முடிவுற்றது. இருப்பினும், முழுமை பெறவில்லை. 7 ஷட்டர்கள் சரியாக இயங்காத காரணத்தால், முழு கொள்ளளவான 62.32 அடிக்கு தண்ணீரை சேமிக்க முடியவில்லை. சுமார் 47 அடிக்கு மட்டும் தண்ணீர் சேமிக்கப்பட்டதால், பருவ மழை காலங்களில், அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணானது. அணையின் 150 மில்லியன் கனஅடி (மொத்தம் 287 மில்லியன் கனஅடி) தண்ணீர் மட்டும் சேமிக் கப்பட்டது. இதனால், 7,497 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவில்லை.

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று ரூ.16.37 கோடி மதிப்பில் 7 ஷட்டர்களை சீரமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி தொடங்கியது. சீரமைப்புப் பணிகளை வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக நிறைவு பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இருப்பினும், பணிகள் மெத்தனமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி கரோனா தடுப்புப் பணி குறித்து ஆய்வு செய்ய வந்த முதல்வர் பழனிசாமி, செண்பகத் தோப்பு அணை சீரமைப்புப் பணி, இம்மாதத்தில் இறுதியில் நிறைவு பெறும் என உறுதியளித்தார். அதன்பிறகு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன

இந்நிலையில் செண்பகத் தோப்பு அணையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப் போது அவரிடம், அணையில் உள்ள 7 ஷட்டர்களை பொதுப் பணித் துறையினர் இயக்கி காண் பித்தனர்.

பின்னர் அமைச்சர் கூறும் போது, “செண்பகத்தோப்பு அணையில் ரூ.16.37 கோடியில் 7 ஷட்டர்கள் பொருத்தும் பணி நிறைவுப் பெற்றுள்ளது. முழு கொள்ளளவு தண்ணீரை சேமிக்க, அணை தயாராக உள்ளது. அணையை முதல்வர் பழனிசாமி பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததும், முதன்முறையாக முழு கொள்ளளவு நீர் சேமிக்கப்படும். அணை நிரம்பியதும், விவசாயப் பாசனத்துக்கு திறக்கப்படும். இதன்மூலம் விவசாயிகளின் 14 ஆண்டு கால கனவு நனவாகி உள்ளது.

மேலும் அணையின் கரை, வடிகால், அணையின் சாலைகள், பணியாளர் குடியிருப்பு, அணை யின் கீழ் உள்ள பழுதடைந்த அலியாபாத் அணைக்கட்டு சீரமைப்புப் போன்ற பணிகளை ரூ.14.25 கோடியில் மேற்கொள்ள மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நிதி கிடைக்க பெற்றதும் பணிகள் தொடங்கும்” என்றார். அப்போது ஆட்சியர் கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x