Published : 30 Oct 2020 08:51 PM
Last Updated : 30 Oct 2020 08:51 PM

ரஜினி அரசியலுக்கு வராதபட்சத்தில் அவரது ஆதரவு ஓட்டுக்கள் கமல்ஹாசனுக்கு கிடைக்கும்: மநீம பொதுச்செயலாளர் முருகானந்தம் தகவல்  

திண்டுக்கல்

ரஜினி அரசியலுக்கு வராதபட்சத்தில் அவரது ஆதரவு ஓட்டுக்கள் மட்டுமின்றி நடுநிலையாளர்கள் ஓட்டுக்கள் அனைத்தும் கமலஹாசனுக்கு தான் கிடைக்கும், என மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் நடந்த மக்கள் நீதிமய்யம் கட்சியின் மாவட்ட ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வியூகம் 2021, தேர்தல் வெற்றிக்காக மிகப்பெரிய பயணத்தை மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுவருகிறது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றத்திற்காக தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நேர்மை என்ற ஒரு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு 50 கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்று கமல்ஹாசன் முதல்வர் பதவியேற்க வாய்ப்புள்ள சூழ்நிலை உள்ளது.

நீட், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பிரச்சனைகளில் மாநில, மத்திய அரசுகள் இணைந்து செயல்படாததால் மக்களுக்கு பாதிப்பு. டாஸ்மாக் விற்றால் தான் அரசுக்கு வருமானம் என்ற சூழலில் உள்ள அதிமுக அரசை அகற்றுவதே மக்கள் நீதிமய்யத்தின் பணியாக இருக்கும்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். ஏனென்றால் மாற்றம் வேண்டும் என்றும், அதிமுக, திமுக கட்சிகளுக்கு மாற்றாகவேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளனர்.

தனித்துபோட்டியிட வாய்ப்புக்கள் இருந்தாலும், தமிழகமக்களின் நலனுக்காக ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பும் மக்கள் நீதிமய்யத்திற்கு அதிகமாக உள்ளது.

நீட் தேர்வை முற்றிலும் அகற்றும்போது, மதசார்பற்ற அரசு என்னும் சொல்லும்போது, தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி., தொகையை முழுமையாக தரும்போது பாரதிய ஜனதா கட்சியுடன் மக்கள் நீதிமய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது.

மேலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என பிரதமர் மோடி வெளியில் பேசாமல் தமிழகத்திலும் பேசி, தமிழகத்தை ஏற்றுக்கொள்ளும்போது வாய்ப்புள்ளது.

இன்னொரு வாய்ப்பு கமலஹாசன் முதல்வராக அமரும்போது மத்திய பாரதிய ஜனதா அரசுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளது.
ஓட்டுவங்கிகள் என்பது முற்றிலும் மாறிவிட்ட காலம் தற்போது உள்ளது. எடப்பாடி பழனிசாமியையே, ஸ்டாலினையோ கொண்டுவரவேண்டும் என யாரும் விரும்பவில்லை. தீர்மானிக்கப்படாத ஓட்டுக்கள் என 30 முதல் 40 சதவீதம் வரை உள்ளது.

இவை அணைத்தும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக இருக்கும். வலைதளத்தில் அரசியல் செய்கிறோம் என எங்களை சொன்னவர்கள் பலர் தற்பாது ஜூம் ஆப் மூலமே கூட்டங்களை நடத்திவருகின்றனர்.

இதை நாங்கள் முன்னரே செய்துவிட்டோம். நாங்கள் செய்வதை பலர் பின்பற்றுகின்றனர். கிராமசபை என்பதன் அர்தத்தை மக்களுக்கு புரிய வைத்துள்ளோம்.

ரஜினி அரசியலுக்கு வராதபட்சத்தில் அவரது ஆதரவு ஓட்டுக்கள் மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் அனைவரின் ஓட்டுக்களும் கமல்ஹசனுக்கு தான் கிடைக்கும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x