Published : 30 Oct 2020 08:24 PM
Last Updated : 30 Oct 2020 08:24 PM
போக்சோ புகார்களையும் மகளிர் காவல் நிலையமே கையாள உத்தரவிடப்பட்டுள்ளதால் மதுரை பெண் போலீஸார் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக ஆதங்கப்படுகின்றனர்.
மதுரை நகரில் திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு, வடக்கு (தல்லாகுளம்) நகர் என 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.
தெற்கு மகளிரில் மட்டும் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியிருக்கும் நிலையில், பிற 3 காவல் நிலையங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே காவலர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும், நீதிமன்றம், மாற்றுப்பணி, பாதுகாப்பு என, தினமும் 10 முதல் 15 பேர் தவிர, எஞ்சியவர் ரெகுலர் காவல் நிலையப் பணியை கவனிக்கும் சூழல் உள்ளது.
புகார்களை விசாரிப்பதில் திணறுகின்றனர். விசாரணையிலும் தொய்வு ஏற்பட்டு சிறிய பிரச்சினைக்குக் கூட ஓரிருநாள் வரை மக்கள் காவல் நிலையத்திற்கு அலைவதாக புகார் எழுகிறது.
மேலும், 4 காவல் நிலையத்திலும் குறைந்த எண்ணிக்கையிலேயே எஸ்.ஐ,க்கள் பணியில் உள்ளனர். அதிக எல்லைகளை கொண்ட திருப்பரங்குன்றம், தல்லாகுளம் மகளிர் காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் தலா 5 எஸ்ஐக்கள் தேவையிருக்கும் பட்டத்தில் ஓரிருவர் மட்டுமே பணியில் உள்ளதாகக் கூறுகின்றனர்.
ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை சூழலில் தற்போது, 18 வயது குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறித்த புகார்களை (போக்சோ) மகளிர் காவல் நிலையமே கையாளவேண்டும் என, காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவால் தினசரி வரும் கணவன், மனைவி பிரச்சினை, வரதட்ணைப் புகார், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்த புகார்களை விசாரிப்பத்தில் தாமதம், கூடுதல் சிரமம் இருப்பதாக நகர் மகளிர் போலீஸார் புலம்புகின்றனர்.
மேலும், அவர்கள் கூறியது: பெரும்பாலும் மதுரை நகரில் ‘போக்சோ ’ தொடர்பான புகார்களை மகளிர் காவலர்கள் உதவியோடு அந்தந்த காவல் நிலையங்களே கையாண்டு வந்தன. அவசியம் இருக்கும் பட்சத்தில் மகளிர் காவல் நிலையம் விசாரிக்க பரிந்துரைக்கப்படும்.
காவல் ஆணையர், துணை ஆணையர், மகளிர் பிரிவு உதவி ஆணையர் இதற்கான பரிந்துரை செய்வர். தற்போது, போக்சோ தொடர்பான புகார்களை அனைத்தும் நாங்களே பொறுப்பு என உத்தரவிடப் பட்டுள்ளது.
இது போன்ற புகாரில் வெளியூர் தப்பிச் செல்லும் சிறுவர், சிறுமிகளை கண்டறிந்து மீட்பது, அது தொடர்பான வழக்குப் பதிவு செய்தல், நீதிமன்றம், மருத்துவப் பரிசோதனை, காப்பகத்திற்கு அனுப்புவது போன்ற பணிகளுக்கென தனியாக குழு தேவைப்படுகிறது.
இரவுப் பணி, விடுமுறையில் இருப்பவர் தவிர எஞ்சியவர்களால் காவல் நிலைய அன்றாடப் பணி, பாதுகாப்புப் பணி, மாயமானவர்களை மீட்பது போன்ற பணியால் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறோம்.
மதுரை நகரில் தினமும் போக்சோ சட்டப்பிரிவில் ஒவ்வொரு மகளிர் காவல் நிலையத்திலும் தலா ஒரு வழக்கு பதிவு செய்யும் சூழல் உள்ளது.
ஏற்கெனவே காவலர்கள், எஸ்ஐக்கள் பற்றாக்குறையால் பணிச்சுமை இருக்கும் நிலையில்,கூடுதலாக போக்சோ குறித்த புகார்களை கையாள்வதிலும் சிரமம் உள்ளது. இதை காவல் ஆணையர் கருத்தில் கொண்டு சில மாற்றங்களை செய்யவேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT