Published : 30 Oct 2020 07:28 PM
Last Updated : 30 Oct 2020 07:28 PM
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சவ்டு, உபரி மண் வழங்கப்பட்ட உரிமம் மற்றும் குத்தகை விபரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலத்தில் உபரி மண் அள்ள உரிமம் பெற்றுக்கொண்டு, கோட்டைக்கரை ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தொடர்பான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது 5 முதல் 10 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு மணல் அள்ளப்பட்டுள்ளது தெரிகிறது.
இது தொடர்பாக ஆய்வு செய்ய வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வழக்கறிஞர் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
அவர் உபரி மண் அள்ள உரிமம் பெற்ற இடத்தில் ஆய்வு நடத்தி, பட்டா நிலத்தில் உபரி மண் அள்ள அனுமதி பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளதா? அந்த மண் எந்த வகையானது? கோட்டைக்கரை ஆற்றில் மணல் அள்ளப்பட்டுள்ளதா? உரிமம் பெற்ற இடத்திலிருந்து ஆறு எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது? என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் சவ்டு மண் மற்றும் உபரி மண் அள்ள எத்தனை உரிமங்கள்/ குத்தகை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆண்டு வாரியாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர், விசாரணையை நவ. 11-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT