Published : 30 Oct 2020 07:43 PM
Last Updated : 30 Oct 2020 07:43 PM
7.5% உள் இட ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும் என்றும், இதற்குத் திமுக உரிமை கோரமுடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
கடந்த செப்டம்பரில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உள் இட ஒதுக்கீட்டுக்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி நேற்று அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''அரசாணைக்கு ஒப்புதல் அளித்ததற்காக முதல்வர் பழனிசாமி, ஆளுநரைச் சந்தித்து அரசின் சார்பில் நன்றி தெரிவித்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அதிக அளவிலான மருத்துவ இடங்களை உருவாக்கியுள்ளோம். குறிப்பாக 1947 முதல் 2011 வரை 1,947 இடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. 2011 முதல் 2017 வரை 1,110 இடங்கள் உருவாக்கப்பட்டன. 2017 முதல் 2019 வரை 290 இடங்கள் உருவாக்கப்பட்டன.
9 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அதிகபட்சமாக 3,050 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால் 1,940 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் இந்த ஆண்டிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவராக வேண்டும். இதற்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டிலேயே உள் ஒதுக்கீடு வழங்கப்படும். அதற்குரிய நடவடிக்கைகளைச் சுகாதாரத் துறை எடுத்து வருகிறது. அதேபோல விரைவில் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்.
இந்த ஒதுக்கீட்டுக்கு திமுக உரிமை கோர முடியாது. இத்திட்டம் முதல்வரால் கொண்டு வரப்பட்ட திட்டம்''.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT