Published : 30 Oct 2020 05:51 PM
Last Updated : 30 Oct 2020 05:51 PM
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் முதல்வரின் சிந்தனையில் உதித்த வரலாற்றுத் திட்டம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
இதற்கிடையே கடந்த செப்டம்பரில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உள் இட ஒதுக்கீட்டுக்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி நேற்று அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''இது அதிமுக அரசுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. இதுகுறித்துத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, 'நானும் அரசுப் பள்ளி மாணவன்தான். எனக்கு ஏழை, எளிய மாணவர்களின் உணர்வு தெரியும்' என்றார்.
மக்களோ, எதிர்க் கட்சித்தலைவரோ யாருமே கோரிக்கை வைக்காத நேரத்தில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்துக்காக முதல்வரின் சிந்தனையில் உதித்த சிறப்பான ஒரு திட்டம் இது. சீர்மிகு கருத்துரு. திட்டம் நிறைவேற முதல்வர் சரியான நேரத்தில் ஆணை பிறப்பித்தார். அதற்கு ஆளுநரும் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம் அகில இந்திய ஒதுக்கீடு போக, தமிழகத்துக்கு என உள்ள 4,043 மருத்துவ இடங்களில் 303 மருத்துவ இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் வருங்காலத்தில் இன்னும் கூடுதல் இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும். 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்குக் கிடைத்த மருத்துவ இடங்களை விடக் கூடுதல் இடங்கள் கிடைக்க எங்கள் அரசு வழிசெய்துள்ளது.
முதல்வரின் ஆணைக்குப் பிறகு விரைவில் கலந்தாய்வு குறித்த நெறிமுறைகள் வெளியிடப்படும்.''
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT