Published : 30 Oct 2020 04:33 PM
Last Updated : 30 Oct 2020 04:33 PM
அரசியல் மிகவும் கடினமான ஆட்டம். உங்களுக்கெல்லாம் வேண்டாம். நீங்கள் மென்மையான உணர்வைப் பிரதிபலிக்கும் கலைஞன். அமைதியாக இருங்கள். கெஞ்சிக் கேட்கிறேன் வேண்டாம் என ரஜினிக்கு சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியலுக்கு வருவதாக 2017-ல் தெரிவித்த ரஜினி மூன்றாண்டுகளாக மக்கள் மன்றத்தை அமைத்து அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தார். கரோனா தொற்று அதிகமானதால் கடந்த 6 மாதமாக பொதுவெளியில் வராமல் வீட்டில் இருக்கிறார்.
இந்நிலையில் தனது பெயரில் வெளியான அறிக்கையை நான் வெளியிடவில்லை என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் மறுப்புத் தெரிவித்தார். கரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், பொதுவெளியில் வருவது பாதுகாப்பானது அல்ல என மருத்துவர்கள் எனக்கு ஆலோசனை கூறியதாகப் பதிவிட்டுள்ளது மட்டும் சரியான தகவல் என்று ரஜினி தெரிவித்தார்.
நிர்வாகிகளுடன் பேசிவிட்டு அரசியல் பிரவேசம் குறித்து முடிவை எடுப்பதாகவும் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உடல் நலன் கருதி ரஜினி, அரசியலுக்கு வரவேண்டாம் என்று திருமாவளவன் இன்று காலையில் பேட்டி அளித்திருந்தார். தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அதேபோன்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தேவர் பூஜை கொண்டாடியபின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சீமான் கூறியதாவது:
“என்னை விட நீங்கள் (ரஜினி) மூத்தவர். சிறந்த கலைஞர். உங்களைப் பார்த்து நாங்கள் கைதட்டி விசிலடித்து வந்தவர்கள். ஆனால், இந்த இடத்தில் (அரசியலில்) நான் உங்களை விட மூத்தவன். கமல்ஹாசனைவிட மூத்தவன்.
அரசியல் மிகவும் கடினமான ஆட்டம். உங்களுக்கெல்லாம் வேண்டாம். நீங்கள் மென்மையான உணர்வைப் பிரதிபலிக்கும் கலைஞன். அமைதியாக இருங்கள். எதையாவது சொல்ல வேண்டுமா? பேட்டியில் சொல்லுங்கள். அதை நாங்கள் செயல்படுத்துகிறோம். பயிற்சி கொடுங்கள். நாங்கள் திடலில் விளையாடுகிறோம்.
அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் இப்போதும் கெஞ்சிக் கேட்கிறேன். வேண்டாம். நீங்கள் அமைதியாக இருங்கள். உங்கள் நலனுக்காகத்தான் சொல்கிறேன்”.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT