Last Updated : 30 Oct, 2020 03:59 PM

 

Published : 30 Oct 2020 03:59 PM
Last Updated : 30 Oct 2020 03:59 PM

குமரி மருத்துவர் தற்கொலை வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம்

நாகர்கோவில்

குமரி மருத்துவர் தற்கொலை வழக்கு, புகாருக்குள்ளான கன்னியாகுமரி டிஎஸ்பி.யின் கட்டுப்பாட்டிற்குள் வரும் சுசீந்திரம் காவல் நிலையத்தில் உள்ளதால், அவ்வழக்கு மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை இலந்தவிளையை சேர்ந்த மருத்துவர் சிவராமபெருமாள் கடந்த 26-ம் தேதி பறக்கையில் உள்ள தனது மருத்துவமனையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், மற்றும் உறவினர் ஒருவரின் தொடர் மிரட்டலே காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்தை கைப்பற்றி சுசீந்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மரணத்திற்கு முன்பு நண்பர், மற்றும் மகள் துர்காவுடன் பேசும் செல்பேசி உரையாடலையும் சமூக வலைத்தளங்களில் சிவராம பெருமாள் பரவ விட்டிருந்தார். கடிதம், மற்றும் செல்பேசி உரையாடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

சிவராம பெருமாள் திமுக மருத்துவரணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்ததால் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோரும் எஸ்.பி. பத்ரிநாராயணனை சந்தித்து மருத்துவரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதாமானால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி. மணிமாறன் தலைமையில் விசாரணைக்குழுவை எஸ்.பி. நியமித்தார்.

இக்குழுவினர் டி.எஸ்.பி. பாஸ்கரன், மற்றும் சிவராம பெருமாளின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மருத்துவர் சிவராம பெருமாள் தற்கொலை வழக்கு சுசீந்திரம் காவல் நிலையத்தில் உள்ளது.

இவ்வழக்கில் புகாருக்குள்ளான கன்னியாகுமரி டி.எஸ்.பி.யின் சரகத்தில் அவரின் கட்டுப்பாட்டில் சுசீந்திரம் காவல் நிலையம் வருகிறது. எனவே வழக்கு நேர்மையாக நடைபெறும் வகையில் மருத்துவர் சிவராமபெருமானின் வழக்கை மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்ற எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட குற்றப்பிரிவிற்கு வழக்கு மாறறப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x