Published : 30 Oct 2020 02:15 PM
Last Updated : 30 Oct 2020 02:15 PM
'நீர் அடித்து நீர் விலகாது' என்பதுபோல சிறு மாச்சரியங்களையும் களைந்துவிட்டு தேர்தல் களத்தில் இறங்க வேண்டும் என, தொண்டர்களைத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 30) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:
"பேரிடர் காலங்களில் மக்களின் துயர் துடைக்க முதலில் நீளுகின்ற கைகளாக திமுகவினரின் கைகள் இருக்க வேண்டும் என்ற உணர்வினை நமக்கு அண்ணாவும், தலைவர் கருணாநிதியும் ஊட்டி வளர்த்திருக்கிறார்கள். நெசவாளர் துயர் துடைப்பதற்காக அந்த மாபெரும் தலைவர்கள் இருவரும், திமுகவின் அன்றைய முன்னோடிகளும் கைத்தறி ஆடைகளைத் தெருவில் நின்று கூவி விற்று, அதில் கிடைத்த தொகையைக் கைத்தறி நெசவாளர்களுக்குக் கொடுத்து உதவிய ஈரம் நிறைந்த வரலாறு நம் பேரியக்கத்திற்கு உண்டு.
இந்தக் கரோனா கொடுந்தொற்றுக் காலத்திலும் அந்த ஈரம் காயாமல், 'ஒன்றிணைவோம் வா' எனத் தொண்டர்களை அழைத்தேன். உங்களில் ஒருவனான என்னுடைய உளப்பூர்வமான அன்பழைப்பினை ஏற்று மாநிலம் முழுவதும் திமுகவினர் உதவிக்கரங்களைத் தாராளமாக நீட்டினர். நல்ல உள்ளங்களைத் தங்களுடன் இந்தப் பணியில் இணைத்து, எளிய மக்களின் பசியாற்றி, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.
'ஒன்றிணைவோம் வா' பணிகளைத் திமுக நிர்வாகிகள் எப்படி மேற்கொள்கின்றனர், பெருந்தொற்றிலிருந்து தங்களையும் பாதுகாத்துக் கொள்கிறார்களா என்பதையெல்லாம் அறிந்துகொள்ளும் வகையில், ஒவ்வொரு நாளும் அவர்களிடம் காணொலி வாயிலாகக் கேட்டறிந்தேன். எல்லா இடங்களிலும் பணிகள் சுறுசுறுப்பாகவும், செம்மையாகவும் நடப்பதையும், அந்தப் பணியில் ஈடுபடும் திமுகவினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டே களப்பணியாற்றுகின்றனர் என்ற செய்தியையும் அறிந்தபோது மகிழ்ந்தேன்.
எத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும், சேப்பாக்கம் தொகுதியின் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினரும் மேற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன் பொதுநலப் பணிக்கு தன் இன்னுயிரைத் தந்த நிகழ்வு இன்னமும் நெஞ்சை வாட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
அதுபோல, இன்னும் பல திமுக நிர்வாகிகளும் இந்தக் கரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் பொதுமக்களுக்குத் தொண்டாற்றி தங்கள் உயிரைப் பொதுவாழ்வுக்கு அர்ப்பணித்துள்ளனர். அத்தகைய தூய தொண்டுள்ளங்களின் திருவுருவப் படங்களையும் காணொலி வாயிலாகத் திறந்து வைத்து, புகழ் வணக்கம் செலுத்த நேர்ந்தது.
காணொலி வாயிலாக மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் கலந்துரையாடியபோது, எங்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காதா எனக் கேட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக நிர்வாகிகளையும் இயன்ற அளவு தொடர்புகொண்டு பேசியபோது, அவர்கள் அகமகிழ்ந்தனர். தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் காணொலி வாயிலாக அறிமுகம் செய்துவைத்து, அவர்களிடமும் உரையாட வைத்தனர். குடும்பக் கட்சி என்று எதிரிகள் செய்யும் விமர்சனங்களைப் புறந்தள்ளி, 'ஆமாம்.. இது குடும்பக் கட்சிதான்.. குடும்பமே ஒரே கட்சி' என்கிற பெருமிதத்தை திமுக குடும்பத்தினர் வழங்கினர்.
ஊரடங்கு காலத்திலும் ஓய்வின்றிப் பணியாற்றிய திமுக நிர்வாகிகளை நேரில் சந்திக்கும் நாளினை அவர்களைப் போலவே நானும் எதிர்பார்த்திருந்தேன். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் எப்போதும் போல திமுக விரைந்து செயலாற்றுகிறது.
தலைவர் கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்கின்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் களம். அவர் இல்லை என்ற எண்ணமே இல்லாத அளவுக்கு, நம் இதயத்தில் நிறைந்திருக்கும் தலைவர் கருணாநிதி நமக்குக் கற்றுத் தந்திருக்கும் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி, நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்திலும் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் அதிகார அத்துமீறல்களை, தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான போக்கினை எதிர்கொண்டு, மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றதுபோல, சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக மகத்தான வெற்றி பெற்று, அதனைத் தலைவர் கருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை நமக்கு ஓய்வில்லை, உறக்கமில்லை என்ற உறுதியுடன் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் ஆர்வம் பொங்க நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு கட்டமாகவும், முதல் கட்டமாகவும் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களைக் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து உரையாடும் வகையில், ஆலோசனைக் கூட்டங்கள் அக்டோபர் 21 தொடங்கி அக்டோபர் 27 வரை நடைபெற்றன. தமிழகத்தில் உள்ள திமுக நிர்வாக மாவட்டங்களைக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு மண்டலங்களாக்கி, ஒவ்வொரு மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரையும் நேரில் சந்தித்து கலந்தாலோசனை நடத்திடும் நல்வாய்ப்பினைப் பெற்றேன்.
இந்தக் கலந்தாலோசனை நிகழ்வுகளில், திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் பங்கேற்று திமுகவின் களப்பணிக்கான வியூகங்களை விவாதித்தனர்.
மேற்கு மண்டலத் திமுகவுக்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் அக்டோபர் 21 அன்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு உடன்பிறப்பின் மனதிலும் உள்ள உணர்வுகளை நானறிவேன். அதனால், பூசிமெழுகாமல், வெளிப்படைத்தன்மையுடன் எதார்த்தமாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டன.
நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நிர்வாகிகளிடம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஏன் அந்த வெற்றி கிடைக்கவில்லை என்று கேட்டபோது, 'அப்போதைய சூழல்கள் வேறு. இப்போது தலைவர் ஸ்டாலின்தான் முதல்வராக வரவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் ஆழப் பதிந்துள்ளது' என்று தெரிவித்தனர். அவர்களிடம், 'திமுக என்பது உங்களில் ஒருவனான என்னால் மட்டும் ஆனது அல்ல; தலைவர் கருணாநிதியை இதயத்தில் ஏந்தியிருக்கும் ஒவ்வொரு தொண்டரும் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்த பேரியக்கம். அந்த ஒருங்கிணைப்பு சிந்தாமல் சிதறாமல் மேலும், மேலும் வலுப்பட வேண்டும். சொந்த நோக்கத்தைவிட, திமுகவின் வெற்றி என்ற பொதுநோக்கமும், தமிழகத்தின் நலன் என்கிற சீரிய நோக்கமும் கொண்டு உழைத்தால்தான் வெற்றி வசப்படும்' என்றும் அவர்களிடம் தெரிவித்தேன்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் களம் போல, சட்டப்பேரவைத் தேர்தல் களத்திலும் மேற்கு மண்டலத்தில் மகத்தான வெற்றியை ஈட்டுவதற்கான களப்பணிகள் குறித்தும், ஆள்வோரின் அதிகார அத்துமீறல்களை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அதுபோலவே, தெற்கு மண்டல திமுகவினை உள்ளடக்கிய கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களின் அனைத்து நிலை நிர்வாகிகளுடன் அக்டோபர் 23 அன்றும், கிழக்கு மண்டல திமுகவினை உள்ளடக்கிய திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் அனைத்து நிலை நிர்வாகிகளுடன் அக்டோபர் 27 அன்றும் விரிவான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்டோபர் 28 அன்று வடக்கு மண்டல திமுகவினை உள்ளடக்கிய கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் அனைத்து நிலை நிர்வாகிகளுடனும் முழுமையான அளவில் கலந்தாலோசனைகள் நடைபெற்று நிறைவுற்றன.
கிளைக் கழகத் தேர்தல்கள் எந்த அளவில் நடைபெற்றுள்ளன என்பதையும் முழுமையாக ஆய்வு செய்து, வார்டுகளில்கூட நிர்வாகிகளுக்கான இடங்கள் காலியாக இல்லாத வகையில், முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன். அடிமட்டம் வரையிலான உள்கட்சி ஜனநாயக அமைப்பு பலம் பெறும்போதுதான், கோட்டை வரை வெற்றிக்கொடி உயர்ந்து பறக்கும்.
இணையவழியில் திமுக உறுப்பினர் சேர்ப்பு இயக்கமான 'எல்லோரும் நம்முடன்' திட்டத்தில் புதிய உறுப்பினர்கள் ஆர்வமாக இணைகிறார்கள் என்பதை அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் எடுத்துரைத்தனர். எந்த வயதில் உள்ளவர்கள் இணைகிறார்கள்? ஆண்கள் மட்டுமா? பெண்களும் உறுப்பினராக ஆர்வம் காட்டுகிறார்களா? என்று அவர்களிடம் கேட்டபோது, இளைஞர்களும் பெண்களும் ஆர்வத்துடன் வருவதாகவும், இளைய தலைமுறையினருக்கு திமுக மீது அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டிருப்பதையும், தங்கள் தலைமுறையைக் காத்த இயக்கம் இது என்ற வரலாற்றுப் பின்னணியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும் திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தலைநகரான சென்னை மாவட்ட திமுக, மலைப்பகுதியான நீலகிரி மாவட்ட திமுக இந்த இரண்டைத் தவிர மற்ற அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் நடத்திய கலந்தாலோசனையின் வாயிலாக, 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 210 சட்டப்பேரவைத் தொகுதிகளின் கள நிலவரத்தை அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு அமைந்தது.
ஏறத்தாழ 10 ஆண்டுகாலமாக அனைத்துத் தொகுதிகளும் சந்தித்துள்ள சீரழிவுகள், மக்களின் மாறாத் துயரம், ஆட்சி மாற்றத்திற்குத் தீர்மானமான மனநிலை, திமுகவின் மீதான அசைக்கவியலா நம்பிக்கை என அனைத்தும் ஆதாரங்களுடன் அலசப்பட்டிருக்கின்றன.
மாபெரும், மகத்தான வெற்றியை திமுகவுக்கும், அதன் கூட்டணிக்கும் வழங்குவதற்குத் தமிழக மக்கள் ஆயத்தமாகவே உள்ள நிலையில், நாம் ஆற்ற வேண்டிய களப்பணி, கட்டிக்காக்க வேண்டிய ஒருங்கிணைப்பு, ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான புரிதல், ஒவ்வொரு வாக்காளரிடமும் பெற வேண்டிய நம்பிக்கை, ஆளுந்தரப்பினரின் பணபலம், அதிகார ஆட்டம் இவற்றையும் கவனத்தில் கொண்டே செயலாற்ற வேண்டும் என்பதையும், மமதையோ சுணக்கமோ கிஞ்சித்தும் தலைகாட்டக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டிடத் தவறவில்லை.
நான்கு மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஊக்கத்துடனும் உத்வேகத்துடனும் இந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் கருத்துகளை வழங்கினார்கள். 2005-ம் ஆண்டு தலைவர் கருணாநிதி இதுபோல அனைத்துத் தொகுதிகளையும் உள்ளடக்கிய நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தியதையும் அதனையடுத்து, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஐந்தாவது முறையாக ஆட்சி அமைத்த வெற்றி வரலாற்றையும் நினைவூட்டி, தற்போது 2020-ல் நடைபெறும் இந்த கலந்தாலோசனைக் கூட்டம், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தரும் என்ற உறுதியினையும் வழங்கினர்.
தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் அந்த உறுதியினை, உங்களில் ஒருவனான நான் எதிர்பார்க்கிறேன். திமுக, மக்களின் பேரியக்கம். அதனால் மக்களிடம் செல்லுங்கள், மக்களுக்குத் துணையாக என்றும் நில்லுங்கள், திமுக ஆட்சியின் சாதனைகளையும், அடிமை ஆட்சியின் வேதனைகளையும் மக்களிடம் நினைவூட்டிச் சொல்லுங்கள். சதிகார அதிகாரக் கூட்டத்தை வெல்லும் ஆற்றல் பெற்றது தலைவர் கருணாநிதியின் லட்சியப் படை!
'நீர் அடித்து நீர் விலகாது' என்பது போல நமக்குள்ளான சிறு மாச்சரியங்களையும் களைந்துவிட்டு களத்தில் இறங்குங்கள். அதிகாரத்தில் இருப்போரின் ஆட்டத்தை மீறி, மக்களின் பேராதரவுடன், ஆச்சரியம் தரும் வெற்றிக்கு ஆயத்தமாகுங்கள். அந்த வெற்றிக் களத்திற்கான விதை, இந்தக் கலந்தாலோசனைக் கூட்டங்களில் ஊன்றப்பட்டிருக்கிறது. உழைப்பெனும் நீர்வார்த்து உன்னத வெற்றியைக் காண்போம்!".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT