Published : 30 Oct 2020 11:39 AM
Last Updated : 30 Oct 2020 11:39 AM
வேலூர் மாவட்டத்தில் மூன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்ட புகாரால் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் விடிய விடிய சோதனை நடத்தினர். இதில் ரூ.61 ஆயிரம் ரொக்கம், மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 'ஹாட்' வகை மதுபாட்டில் ஒன்றுக்கு 5 முதல் 10 ரூபாய் வரையும் பீர் பாட்டில் ஒன்று 10 முதல் 20 ரூபாய் வரையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் பணத்தில் டாஸ்மாக், கலால் பிரிவு அதிகாரிகளுக்கு ஒரு பங்கும், மீதமுள்ள பணத்தைக் கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் பங்கிட்டுக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் இன்று (அக். 30) மிலாடி நபி தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கள்ளச் சந்தையில் மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்கள் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை நேற்று (அக். 29) வாங்கிப் பதுக்க ஆரம்பித்தனர். நேற்று மாலை 6 மணிக்குப் பிறகு மதுபானக் கடைகளில் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
இதையடுத்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மூன்றாகப் பிரிந்து டாஸ்மாக் கடைகளில் சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை, வேலூர் அருகேயுள்ள பென்னாத்தூர் பகுதியில் இயங்கும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நேற்று இரவு 8 மணியளவில் சோதனையைத் தொடங்கினர்.
டாஸ்மாக் கடையில் விற்பனைத் தொகை, மதுபாட்டில்கள் இருப்பு உள்ளிட்டவற்றைக் கணக்கிடத் தொடங்கினர். இந்தச் சோதனை விடிய விடிய இன்று காலை 8 மணி வரை தொடர்ந்தது. 12 மணி நேரம் வரை நீடித்த சோதனையில் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடையில் மட்டும் ரூ.7.50 லட்சத்துக்கும், பென்னாத்தூரில் உள்ள ஒரு கடையில் ரூ.5.12 லட்சத்துக்கும், மற்றொரு கடையில் ரூ.7.84 லட்சத்துக்கும் மதுபாட்டில்கள் விற்பனையானது தெரியவந்தது. இன்று மதுபானக் கடைகள் மூடியிருக்கும் என்பதால் வழக்கத்தை விட சுமார் 40 சதவீதம் அதிக அளவுக்கு மதுபாட்டில்கள் விற்பனையாகி இருந்தன.
அதிக விலைக்கு விற்றதில் ரூ.61 ஆயிரம்
வேலூர் கடையில் கணக்கில் வராமல் தனியாக இருந்த 48 மதுபாட்டில்களுடன் ரூ.12 ஆயிரம் ரொக்கம், பென்னாத்தூரில் உள்ள இரண்டு கடைகளில் ரூ.14 ஆயிரத்து 700 மற்றும் ரூ.34 ஆயிரத்து 720 என மொத்தம் 61 ஆயிரத்து 990 ரூபாய் பணம் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்தது உறுதியானது.
பென்னாத்தூர் கடை ஒன்றில் ரூ.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் கணக்கில் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது கள்ளச் சந்தையில் மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்கள் வாங்கிச் சென்றுள்ளதாகவும் அதற்கான பணத்தை அக்.31-ம் தேதி காலைக்குள் கொடுத்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.
பின்னர், பணத்தை வாங்கி வருவதாகக் கூறிச் சென்ற விற்பனையாளர் ஒருவர் ரூ.4.17 லட்சம் பணத்துடன் திரும்பி வந்துள்ளார். 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களுக்குக் கூடுதலாக ரூ.17 ஆயிரம் இருப்பது ஏன் என்று விசாரித்தபோது மதுபாட்டில்களுக்கான கமிஷன் பணம் என்றதும் அந்தப் பணத்தையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வழக்குப் பதிவு
கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணம் தொடர்பாக மூன்று கடைகளின் மேற்பார்வையாளர்கள் மீது வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களை விரைவில் விசாரணைக்கு அழைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்கமாக டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில் சோதனை, கையூட்டுப் பணம் வாங்க வரும் அதிகாரிகளை மட்டும் இதுவரை கைது செய்துவந்தனர். டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்துவது தமிழ்நாட்டில் இதுதான் முதல் முறை என்று அப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சோதனையால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பணியாளர்கள், மாவட்ட டாஸ்மாக் அலுவலக ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT