Published : 30 Oct 2020 10:51 AM
Last Updated : 30 Oct 2020 10:51 AM
ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களை ரயில்வே ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என, வலியுறுத்தி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (அக். 30) மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதம்:
"ரயில்வே வேலை வாய்ப்பு வாரியம் 2018 ஆம் ஆண்டு, இணையவழியில் தேர்வு நடத்தி, துப்புரவுத் தொழிலாளர்களைத் தேர்வு செய்து, ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தியது. குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு, தொடர்ந்து அவர்கள் வேலை செய்து வருகின்றார்கள்.
கரோனா தொற்றுக் காலத்தில், அவர்கள் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில், முழுநேரம் பணி ஆற்றி இருக்கின்றார்கள். மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உதவியாக இயங்கினார்கள். கரோனா பாதித்த நோயாளிகளுக்கு உடை மாற்றுவது, கழிப்பறைகளுக்கு அழைத்துச் செல்வது, இறந்தவர்களின் உடல்களை வீடு கொண்டு சேர்ப்பது என அனைத்து வேலைகளையும் செய்தார்கள்.
ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புகள், அலுவலகங்களிலும் துப்புரவுப் பணி செய்து இருக்கின்றார்கள். மனைவி, பிள்ளைகளுக்குத் தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் நிலவிய சூழலில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணி ஆற்றி இருக்கின்றார்கள். அவர்களுடைய குடும்பங்கள், ரயில்வே துறையை நம்பித்தான் இருக்கின்றனர். அவர்களுடைய பணி, ரயில்வே துறைக்கு முழுநேரமும் தேவைப்படுகின்றது.
எனவே, அவர்களை ரயில்வே துறையின் முழுநேரப் பணியாளர்களாக அறிவித்திடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்".
இவ்வாறு வைகோ அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT