Published : 30 Oct 2015 04:35 PM
Last Updated : 30 Oct 2015 04:35 PM
‘ஏரி மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகள் வண்டல்மண் எடுக்க அனுமதிக்கலாம்’ என கடந்த 15 நாட்களுக்கு முன்னர் அரசு சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பள்ளம் குண்டேரிப்பள்ளம், சஞ்சிவிராயன் ஏரி, வரட்டுப்பள்ளம், வேம்பத்தி, கொளப்பலூர் ஏரி, புளியம்பட்டி ஏரி, பெரிய குளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. இவைகள் மூலம் பாசனத் தேவையும், அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாகவும் உள்ளன.
இவற்றில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட 20-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளும், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 80-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன.
இந்த நீர்நிலைகளில் இருந்து வண்டல் மற்றும் சரளை மண் எடுக்க முறையான விதிமுறைகள் இல்லை. குறிப்பிட்ட நீர்நிலைகளில் மட்டும் ஒப்பந்ததாரர்கள் மூலம் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.
ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை எடுக்க அனுமதிக்க விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், வண்டல் மண் எடுக்க அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனசபை தலைவர் சுபி.தளபதி கூறியது:
அரசு சார்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ஏரி, குளங்களின் எண்ணிக்கை, அவற்றில் எவ்வளவு வண்டல் மண் மற்றும் சரளை மண் உள்ளது என்பது போன்ற விவரங்களை சேகரிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். குழுவில் பொதுப்பணித்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், ஏரி மற்றும் குளங்களில் ஒரு மீட்டர் ஆழத்துக்கு வண்டல் மண்ணை விவசாயிகள் கட்டணமின்றியும், அதற்கு மேல் உள்ள சரளை மண்ணை கட்டணம் செலுத்தி எடுக்க ஒப்பந்த அடிப்படையில் 3 மாதத்துக்கு அனுமதிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால், ஈரோடு மாவட்டத்தில் மண் அள்ள அனுமதி மறுக்கப் படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மண் எடுக்க முன்னரே அனுமதி கொடுத்திருந்தால், செலவின்றி நீர்நிலைகள் ஆழப்படுத்தப்பட்டு, கூடுதல் நீர் தேங்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
அரசுக்கு தூர் வாரும் செலவு குறையும். மண்ணை விற்கும் தொகையை கொண்டு நீர்நிலைகளை பராமரிக்கவும், பலப்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். ஏற்கெனவே குண்டேரிப்பள்ளம் அணை போன்றவை நிரம்பி உபரிநீர் வெளியேறும் நிலை உள்ளது. அணையில் மண் எடுக்க அனுமதி வழங்கியிருந்தால், தற்போதைய பருவமழையின்போது நீரை முழுமையாக தேக்கி வைத்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் அனுமதி
இதுகுறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் கூறும்போது, “அரசின் சுற்றறிக்கை கடந்த வாரம்தான் கிடைத்தது. அதன்படி, நீர்நிலைகள் எண்ணிக்கை, அவற்றில் எவ்வளவு மண் எடுக்கலாம் என்பது போன்ற தகவல்களை பொதுப்பணித்துறை, வருவாய்துறை, உள்ளாட்சி நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம்.
தகவல்கள் தொகுக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்படும். அதன்பின்னர் விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். சரளை மண்ணை விலை கொடுத்து மற்றவர்கள் வாங்கிக்கொள்ள முடியும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT