Last Updated : 29 Oct, 2020 07:58 PM

50  

Published : 29 Oct 2020 07:58 PM
Last Updated : 29 Oct 2020 07:58 PM

தமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்: சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு முன்னாள் எம்எல்ஏ தமிழிலேயே மீண்டும் கடிதம்

பண்ருட்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.சிவக்கொழுந்து.

மத்திய அமைச்சகத்திற்கு பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ பி.சிவக்கொழுந்து தமிழில் எழுதிய கடிதத்திற்கு, இந்தி அல்லது ஆங்கிலத்தில் கடிதம் எழுதுமாறு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுங்கள் என்று சிவக்கொழுந்து மீண்டும் தமிழிலேயே கடிதம் அனுப்பியுள்ளார்.

கடலூர் செம்மங்குப்பத்தில் இயங்கிவரும் சாயப்பட்டறைக்கு, சட்ட விரோதமாக, தண்ணீர் உறிஞ்சி எடுத்துச் செல்வதைத் தடை செய்யக் கோரி கடந்த 8.10.2020 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியரிடம், தேமுதிக மாவட்டச் செயலாளரும், பண்ருட்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.சிவக்கொழுந்து தலைமையில் அக்கட்சியினர் மனு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தேசிய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற இயக்குநருக்கும் அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவை, சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் சிவக்கொழுந்திற்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

திரும்ப வந்த கோரிக்கை மனுவைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் கோரிக்கையை இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இதனால் அதிருப்தியடைந்த சிவக்கொழுந்து, "மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இத்துறை, மொழிப் பாகுபாடு காட்டி, அதுவும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மொழிகளில் ஒன்றான, தமிழ் மொழியில் எழுதியதற்காகவே, அதனைத் திருப்பி அனுப்பியிருப்பது கண்டனத்திற்குரியது.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தமிழிலேயே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், பிரச்சினைகள் குறித்துத் தமிழில் பேசவும் அனுமதிக்கிறபோது, தமிழகத்திலிருந்து தமிழில் அனுப்பப்பட்ட மனு, மொழிப் பாகுபாடு காட்டித் திரும்ப அனுப்பப்படுவது, தமிழகத்தையும், தமிழ் மொழியையும் அவமானப்படுத்தி, கோரிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் சதித் திட்டம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்குத் தமிழ் மட்டும் எழுதப் படிக்கத் தெரியும் என்பதால், மத்திய அரசு இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கை விவரங்களைத் தமிழ் மொழி எழுத, படிக்கத் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு படித்து, புரிந்து, தனது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்குத் தமிழிலேயே கடிதம் எழுதியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x