Published : 29 Oct 2020 07:10 PM
Last Updated : 29 Oct 2020 07:10 PM

7.5% உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில் தமிழக அரசு வெளியிட்டது

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தாமதிக்கும் நிலையில், சுகாதாரத் துறை சார்பில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டுத் தேர்வில் வகைப்படுத்துவது என்பது சம நீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

பின்னர் அந்தத் திருத்தங்களுடன் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஒரு சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும். நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்குக் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு காத்திருக்கிறது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் இவ்வழக்கு வந்தபோது ஆளுநரை நிர்பந்திக்க, உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஆளுநர் அனுமதி குறித்து அரசுத் தரப்பு காத்திருந்தது. ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் கலந்தாய்வு தடைப்படுவதால் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தும் விதமாக, தமிழக அரசின் சார்பில் 5 அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்து விரைவாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். உரிய முடிவெடுப்பதாக ஆளுநர் தெரிவித்ததாக அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்குப் பதிலளித்திருந்த ஆளுநர், ஒப்புதல் அளிக்க 3 முதல் 4 வாரகால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்திருந்தார். இதனால் திமுக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடந்தது. பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் ஆளுநர் இந்த விவகாரத்தில் தாமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர்.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு சுயமாக முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் முன்னரே தீர்ப்பளித்துள்ள நிலையில், இதுகுறித்து ஆளுநரின் ஒப்புதல் தேவை இல்லை. அரசாணையாக அரசு வெளியிட்டு, மாணவர்கள் கலந்தாய்வுக்குச் செல்லலாம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்ட பலர் கருத்துத் தெரிவித்தனர்.

ஆளுநர் ஒப்புதல் வழங்க நீதிமன்றம் தலையிட முடியாது என சட்ட ரீதியாகச் சொல்லலாம். ஆனால் மனசாட்சிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தெரிவித்தது.

இந்நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தள்ளிப்போடுவதால் கலந்தாய்வும் தள்ளிப்போகிறது. இதனால் மாணவர், பெற்றோர் மத்தியில் உருவாகும் நிம்மதியற்ற நிலையைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு 7.5% உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.

அரசாணை சரியா? தவறா? செல்லுமா? செல்லாதா? யாரும் நீதிமன்றத்தை நாடுவார்களா? எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கற்பக விநாயகம் தெரிவித்த கருத்து முக்கியமானதாக உள்ளது.

“இந்த அரசாணையை ஏற்று ஆளுநர் உடனடியாக அங்கீகரித்தால் மாணவர்களுக்குப் பயனாக இருக்கும். அரசும் எத்தகைய சூழ்நிலையில் மாணவர்கள் நலனுக்காக அரசாணையை வெளியிட்டோம் என ஆளுநரைச் சந்தித்து விளக்கி ஒப்புதல் பெற்று நிலைமையைச் சுமுகமாக முடிக்கவேண்டும்” என ஓய்வுபெற்ற நீதிபதி கற்பக விநாயகம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அரசாணை மூலம் மாணவர்களுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. இதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் சென்றால் அரசு சந்திக்கத் தயாராக உள்ளதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். விரைவில் கலந்தாய்வுத் தேதியை அரசு அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x