Published : 29 Oct 2020 05:31 PM
Last Updated : 29 Oct 2020 05:31 PM
அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், ரோபாடிக்ஸ், ஓப்பன் சோர்ஸ் மைக்ரோ கண்ட்ரோலர் போர்டுகள், செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர், 3டி பிரிண்டர்கள் போன்ற ஆய்வக உபகரணங்களைக் கொண்டு, தானே கற்றல் வாயிலாக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 சென்னைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள அடல் டிங்கரிங் ஆய்வகங்களை ஆணையாளர் பிரகாஷ், இன்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 சென்னைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள அடல் டிங்கரிங் ஆய்வகங்களை (ATAL TINKERING LAB) ஆணையர் பிரகாஷ் இன்று (29.10.2020) தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, பள்ளிகளில் முழுமையான கல்வி, நடைமுறை மற்றும் வாழ்க்கைத் திறன் சார்ந்த கல்வியை அளிப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட டி.எச். சாலை சென்னை மேல்நிலைப்பள்ளி, ராட்லர் தெரு சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புத்தா தெரு சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் இந்த அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் தற்பொழுது நிறுவப்பட்டுள்ளன.
மத்திய அரசு சீரிய முன்முயற்சியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வகங்கள் அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், ரோபாடிக்ஸ், ஓப்பன் சோர்ஸ் மைக்ரோ கண்ட்ரோலர் போர்டுகள், செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர், 3டி பிரிண்டர்கள் போன்ற ஆய்வக உபகரணங்களைக் கொண்டு தானே கற்றல் வாயிலாக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இந்த ஆய்வகத்தில் அமைந்துள்ள உபகரணங்களைப் பயன்படுத்தும்போது மாணவ, மாணவியர்களுக்குத் தானே கற்றல் திறன், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் முதலிய அம்சங்களைக் கொண்டு அவர்களின் திறன் மேம்படுத்தப்படும்.
இந்த ஆய்வகங்கள் அமைந்துள்ள பள்ளிகளான டி.எச்.சாலை சென்னை மேல்நிலைப்பள்ளி, ராட்லர் தெரு சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புத்தா தெரு சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் தலைமையாசிரியைகளிடம் திறவுகோல் வழங்கப்பட்டு 3 ஆய்வகங்கள் சீரிய முறையில் செயல்பட இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மடுவன்கரை சென்னை மேல்நிலைப்பள்ளி, புல்லா அவென்யூ சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்.ஜி,ஆர் நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இவற்றோடு, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.
இது மாணவர்களிடையே அறிவியல் மனோபாவம், புதுமை படைக்கும் திறன் முதலியவற்றை ஊக்கப்படுத்த சக்தி வாய்ந்த கருவி என்று ஆணையர் பாராட்டினார். மேலும், 21-ம் நூற்றாண்டின் திறன்களை வளர்ப்பதற்கான திறவுகோலாக இவ்வாய்வகம் திகழும் எனவும், 7 மாநகராட்சிப் பள்ளிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள அடல் ஆய்வகங்கள் பிற மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் ஆணையர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு திட்டமான பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு சென்னைப் பள்ளியிலும் ஒரு வகுப்பறைக்கு அப்பள்ளியில் பயின்று ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்கும் மாணாக்கரின் பெயரிடும் திட்டத்தினைத் தொடங்கி வைக்கும் நிகழ்வாக பெரம்பூர் எம்.எச் சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி பி.ஜெயஶ்ரீ பெயரிட்ட வகுப்பறையை ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும், பெரம்பூர் மார்க்கெட் தெருவில் உள்ள சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறந்த மாணவியான ஐஏஎஸ் அதிகாரி வெற்றிச் செல்வி பெயரிட்ட வகுப்பறையை இணை ஆணையர் (கல்வி) சங்கர்லால் குமாவாத் திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவாத், கல்வி அலுவலர் (பொ) சாந்தி, மண்டல அலுவலர் வெங்கடேசன், தலைமை நிர்வாக அதிகாரி நாகலட்சுமி, கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள், தலைமையாசிரிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT